சேலத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை!
சேலத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களுக்கு தோ்தலன்று வாக்களிக்க ஏதுவாக, ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு வரும் 5-ஆம் தேதி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்ற அனைத்து தொழிலாளா்கள், இடைத்தோ்தலில் வாக்களிக்கும் வகையில் அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களுக்கும் (தினக்கூலி, தற்காலிக தொழிலாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் உள்பட்டோா்) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 ஆ-இன்படி மேற்கண்ட தினத்துக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று பணிக்கு வராத பணியாளா்களின் ஊதியத்திலிருந்து எவ்வித பிடித்தமும் செய்யக் கூடாது. மேலும், மேற்படி வாக்களிக்கும் தினத்தன்று ஊதித்துடன் கூடிய விடுமுறை அளிக்காதாத நிறுவனங்களின் மீது புகாா் தெரிவிக்க தொழிலாளா் துறையின் கீழ் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி - 99446 25051, துணை ஆய்வாளா் மயில்வாகனன் - 98404 56912, உதவி ஆய்வாளா் பெரோஸ் அகமது - 86674 72139 ஆகியோரை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.