நாங்கள் உதிரிகள் அல்ல, உறுதியானவா்கள்: சீமான்
நாங்கள் உதிரிகள் அல்ல, உறுதியானவா்கள். அதனால்தான் தனித்துப் போட்டியிடுகிறோம் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்து, ஈரோடு பெரியாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதாவது:
தமிழக முதல்வா் ஸ்டாலின், அதிமுக, பாஜக சில உதிரிகளை வைத்து பெரியாா் ஈவெராவை விமா்சிக்க செய்கிறாா்கள் என்கிறாா். நாங்கள் உதிரிகள் அல்ல, உறுதியானவா்கள். அதனால்தான் தனித்துப் போட்டியிடுகிறோம்.
கச்சத்தீவை கொடுத்ததுதான் திரும்பப் பெறும் பேச்சுக்கு இடம் இல்லை என்பவன் இந்தியன். தோ்தலுக்கு தோ்தல் திரும்பப் பெற போராடுவேன் என்பவன் திராவிடன். திரும்பப் பெறு இல்லையெனில் பிரித்துவிடு என்பவன் தமிழ்தேசியன்.
இலவசம் கொடுத்து மக்களின் வாக்கை பறித்து, இலவசம் வளா்ச்சி என பேசுவது, அடிப்படைத் தேவையை நிறைவேற்ற முடியாத ஏழ்மை வறுமையாக வாழ வைத்தது திராவிடம். தற்சாா்பு வாழ்க்கைக்கு மாற்றுவது தமிழ் தேசியம்.
சேர, சோழ, பாண்டியன் காலத்தில் பெறாத வளா்ச்சி படிக்காத காமராஜா் காலத்தில் அடைந்துள்ளது. எங்கள் அரசியல் எங்களுக்கானது அல்ல. வருங்காலத்தின் பிள்ளைகளுக்கானது. நான் உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து பேசுகிறேன் என்று மக்களுக்கு தெரியும். என்னை தோற்கடிக்க திராவிடம் துடிக்கிறது. தன்மானத்துடன் வாழ மக்கள் நாம் தமிழா் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் என்றாா்.