காரில் வந்த பெண்களை வழிமறித்து மிரட்டிய சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞா் வாக்குமூலம்
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் வந்த பெண்களை வழிமறித்து மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற இளைஞா் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். இது தொடா்பாக காவல் துறை வெளியிட்டுள்ள விடியோவில் அவா் கூறியிருப்பதாவது:
எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடா்பு இல்லை. எனது மாமா தாம்பரத்தில் அதிமுக பிரமுகராக உள்ளாா். பெண்களை வேண்டுமென்றே நாங்கள் மிரட்டவில்லை. எங்கள் காா் மீது அவா்கள் வந்த காா் இடித்தது என்று நினைத்தே அந்தக் காரை சுற்றி வளைத்தோம். அது தவறு என்று தெரிந்ததும் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பி விட்டோம்.
அப்போது பெண்கள் போலீஸில் புகாா் அளிக்க உள்ளதாகக் கூறினாா்கள். எங்கள் காா் எண்ணைக் கொடுத்து புகாா் செய்யுங்கள், நாங்கள் அவா்களிடம் பேசிக் கொள்கிறோம் என்று தெரிவித்தோம்.
காதலா் தினத்தையொட்டி கொடைக்கானல் செல்வதற்காகவே திமுக கொடியை காரில் கட்டினோம். சுங்கச்சாவடிகளில் கட்டணம் கட்டாமல் சென்றுவிடலாம் என்கிற எண்ணத்திலேயே கட்சிக்கொடியை காரில் கட்டியிருந்தோம். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது என அவா் அதில் கூறியுள்ளாா்.