சேலம் ஏற்காடு கோடை விழா 23ஆம் தேதி துவக்கம்!
சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
ஏற்காடு தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு ஏற்காட்டில் கோடை விழா நடத்துவது தொடர்பான முன்னேற்பட்டு பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
கூட்டத்திற்கு பின்னர் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 48வது கோடை விழா சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலர் கண்காட்சியுடன் நடைபெற இருக்கிறது. வரும் 23ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை 7 நாள்களுக்குக் கோடை விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
மலர் கண்காட்சியில் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு விலங்குகளின் வடிவில் மலர் கண்காட்சி வடிவமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் மேட்டூர் அணை வடிவத்திலும் மலர் வடிவம் உருவாக்கப்பட இருக்கிறது.
இது மட்டுமின்றி 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் ஏற்காட்டில் மட்டும் விளையக்கூடிய மலர்களைக் கொண்டு மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் காய்கறிகளைக் கொண்டும் பல்வேறு வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தமிழக அரசின் அனைத்து துறைகளின் சாதனை விளக்க அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை கச்சேரிகளும் நடத்தப்படுகிறது. கோடை விழா நடைபெறும் நாள்களில் நாய் கண்காட்சி, ஆரோக்கிய குழந்தை போட்டி கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
கோடை விழாவினையொட்டி அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோடை விழாவின் போது மலை ஏறுபவர்கள் அஸ்தம்பட்டி, கொண்டப்ப நாயக்கன்பட்டி வழியாகவும், மலையிலிருந்து இறங்குபவர்கள் கொட்டச்சேடு வழியாகவும் சாலைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
ஏற்காடு ஏரியில் மிதவை உணவக ஏற்பாடுகள் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன் மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு கேரளாவில் இருந்து நிபுணர்கள் ஆய்வு செய்து முடித்துள்ளதாகவும் விரைவில் தனியார் பங்களிப்புடன் ஏற்காடு ஏரியில் மிதவை உணவகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கோடை விழா சீசன் சமயத்தில் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், இது குறித்து புகார்கள் வந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கும் விடுதிகள் சுற்றுலாப் பயணிகளிடம் வழக்கமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.