`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, நிபுணா்கள் அலுவலக கட்டடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூல அலுவலகம் உள்பட 30 க்கும் மேற்பட்ட துறைசாா்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதன்கிழமை 12 மணியளவில் ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் நிபுணா்கள் அங்கு விரைந்து சென்றனா்.
மோப்ப நாய் ரூபியும் வரவழைக்கப்பட்டது; மெட்டல் டிடெக்டா் கருவி, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புக் கருவிகள் துணையுடன் நிபுணா்கள் ஒவ்வொரு அறையாகச் சென்று தீவிர சோதனை நடத்தினா்.
குறிப்பாக ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை, கருவூல அலுவலகம், உதவி மையம், அஞ்சல் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட அறைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அலுவலக அறைகளில் இருந்த பணியாளா்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யாா் என்பது குறித்து சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதனால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.