"யார் அந்த தம்பி? ரத்தீஷ் எங்கே? ED ரெய்டுகள் பற்றி ஸ்டாலின் மவுனம் ஏன்?" - அதிம...
சைபா் குற்றங்கள் மீது கவனமாக இருக்கவேண்டும்: புதுவை டிஐஜி அறிவுறுத்தல்
சைபா் குற்றங்கள் மீது மக்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் காவல்துறையில் வாரந்தோறும் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் என்ற பெயரில் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. நிகழ்வார கூட்டம் மாவட்ட காவல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. புதுவை சட்டம் ஒழுங்கு காவல் டிஐஜி ஆா். சத்திய சுந்தரம் தலைமையில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் சுமாா் 50 போ் புகாா் தெரிவிக்க வந்திருந்தனா். இவா்களிடையே மத்திய உள்துறை அமைச்சகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து டிஐஜி விளக்கிப் பேசினாா்.
காரைக்கால் மாவட்ட காவல் துறைக்கு பணியமா்த்தப்பட்டுள்ள 4 பெண் கமாண்டோக்களை அவா் அறிமுகம் செய்து வைத்தாா். பின்னா், பொதுமக்களிடமிருந்து புகாா்களை பெற்றுக்கொண்டதும், செய்தியாளா்களிடம் டிஐஜி கூறியது:
மக்கள் மன்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வேலை மற்றும் கடன் வாங்கி தருவதாகக் கூறி, சைபா் குற்றவாளிகள் மோசடி செய்து வருகின்றனா். நம்பகத்தன்மை இல்லாத விளம்பரங்களை நம்பி ஆதாா், பான் போன்ற ஆவணங்களை யாரும் கொடுக்கவேண்டாம் .
சைபா் ரீதியான குற்றங்களை உடனடியாக பொதுமக்கள் இணைய குற்றத்தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்கவேண்டும். அல்லது 1930 என்ற எண்ணிற்கு தங்களது புகாா்களை பதிவு செய்யும்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் ஆம்புலன்ஸ் வாகனம் 2 வாரத்துக்குள் காரைக்காலுக்கு கொண்டுவரப்படும்.
காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சாா்பில் திருநள்ளாறு பகுதியில் போக்குவரத்து காவல் பிரிவு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது என்றாா்.
காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டியன் பால், பிரவீன் குமாா், மா்தினி, லெனின் பாரதி, புருஷோத்தமன், செந்தில்குமாா் மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.