செய்திகள் :

சொந்த வீடு கனவா? சுமையா? 3 பிஎச்கே - திரை விமர்சனம்!

post image

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான 3 பிஎச்கே திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்தின் பெயரிலேயே கதையை வைத்திருக்கிறார்கள். மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் சென்னையில் நடுத்தர குடும்பம் ஒன்று சொந்த வீட்டை வாங்க போராடுகிறது. குடும்பத் தலைவரான சரத் குமார், அவரது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத் என அமைதியான அன்பான குடும்பம் ஒரு வீட்டை வாங்குவதையே வாழ்வில் பெரிய இலக்காகக் கொண்டிருக்கின்றனர். வாடகை வீட்டில் வசிக்கும்போது சந்திக்கும் நெருக்கடிகள், அவமானங்கள் எல்லாம் காலம் மாற, மாற அவர்களைத் தொந்தரவு செய்ய எப்படியாவது சொந்த வீட்டை வாங்க வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர்.

ஒரு வீட்டை கட்டுவதோ வாங்குவதோ அவ்வளவு எளிதானதா? என்னென்ன தடைகளை சித்தார்த் குடும்பம் எதிர்கொள்கின்றனர், இறுதியில் சொந்த வீடு கிடைத்ததா இல்லையா என்கிற கதையில் சில திருப்பங்களையும், வாழ்க்கை எதார்த்தங்களையும் கொண்டு உருவாகியிருக்கிறது 3 பிஎச்கே திரைப்படம்.

வீட்டை வாங்க வேண்டும் என முடிவெடுத்தபின் ஏற்படும் தடங்கல்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என வாழ்க்கைக்கு நெருக்கமான உண்மைகளைப் படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒரு நல்ல வண்டியை வாங்க ஒவ்வொரு ஷோரூமாக ஏறி விலைகேட்டு அதைத் தொட்டுப் பார்ப்பதுபோல், சொந்தமாக வீடு வாங்க ஒரு குடும்பம் அப்பார்ட்மெண்ட்களில் ஏறி இறங்குவதும், சுவர்களைத் தொட்டு நமக்கான வீட்டை வாங்கிவிடமாட்டோமா என ஏங்கும் இடங்கள் படத்தில் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு நல்ல வீடு எவ்வளவு முக்கியம் என்பதை இடைவேளைக் காட்சியில் பிரமாதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

முக்கியமாக, தனக்கு பிடிக்காத துறையைத் தேர்ந்தெடுத்த சித்தார்த், அதிலிருந்து வெளியேறுவதாகக் கூறி சரத் குமாரிடம் பேசும் வசனம் சிறப்பு. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தன் முந்தைய படங்களான 8 தோட்டாக்கள், குறுதி ஆட்டம் படங்களிலிருந்து உருவாக்க ரீதியாக கவனிக்கக்கூடிய படத்தைக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு, காட்சியமைப்புகள் எல்லாம் தேர்ந்த இயக்குநராகிவிட்டார் என்பதைக் காட்டுகின்றன.

கதை ரீதியாகவும் நடுத்தரக் குடும்பம் சென்னை போன்ற மிகப்பெரிய நகரத்தில் ஒரு வீட்டை வாங்க எவ்வளவு சிரமங்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை சில காட்சிகளில் உணர்வுப்பூர்வமாகத் திரைக்குக் கடத்தியிருக்கிறார். சித்தார்த் - சைத்ராவின் காதல் காட்சிகள் ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

வீடு என்றாலே நமக்கு முதலில் பாதுகாப்புதான். நம்முடைய இன்பம், துன்பம் இரண்டையும் கொண்டாடுவதற்கோ மறைப்பதற்கான இடம். ஆனால், இந்தப் படம் இறுதியில் சொந்த வீட்டை ஒரு மரியாதையாவும், வெற்றியாகவும் பார்ப்பதுடன் நின்றுவிடுவது சரியானதாகத் தோன்றவில்லை. அதுவும், ஒட்டுமொத்த குடும்பமும் தங்களின் ஆசைகளை, விருப்பங்களை தியாகம் செய்து சொந்த வீட்டை அடைவதற்கான தேவை என்ன? படத்தின் இறுதிவரை ஒரு குடும்பம் சொந்த வீடு என்கிற கனவால் துன்பத்தையே சந்தித்துக்கொண்டிருக்கிறது. வாடகை வீட்டில் வாழ்ந்தாலும் நான்கு சுவர்களுக்குள் சந்தோஷம் என எதுவும் இல்லையா? ஒரு காட்சியிலாவது சொந்த வீடு இல்லையென்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதை இயக்குநர் பதிவுசெய்திருக்கலாம்.

சுட்டிக்காட்ட வேண்டிய இன்னொரு விஷயம், படத்தில் சித்தார்த்துக்கு ஒரு மேலதிகாரியும் சரத் குமாருக்கு அவரின் முதலாளியின் மகனும் திமிரான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது, இன்றைய தலைமுறையில் நமக்கு மேல் இருக்கும் அதிகாரிகளோ முதலாளிகளோ கேவலமான முறையில் ஊழியர்களை நடத்துவதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

உண்மையில், ஐடி போன்ற தொழில்துறைகளில் இருக்கும் மேலாளர்கள் தன் சக பணியாளரைப் பார்த்து, “நீயெல்லாம் சராசரி, உன்னால் எதுவும் செய்ய முடியாது. நகலெடுக்கற வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறாய். நினைத்தாலும் வேலையைவிட முடியாது. பொறுத்துக்கொண்டு போ” எனத் தன் திமிரை நேரடியாகக் காட்ட முடியுமா? இதில் அப்படி ஒரு கதாபாத்திரம் சித்தார்த்திடம் கேள்வி கேட்கிறார். ஒருவேளை அப்படியொரு நபர் இருக்கலாம். ஆனால், அதை சரியான எழுத்தில் கொண்டுவர வேண்டும். இப்படத்தில் அது இல்லை. சரத் குமாரின் பழைய முதலாளி நல்ல மனிதராகக் காட்டப்படுகிறார். அதற்கு என்ன பொருள்? கடந்த தலைமுறையில் நல்ல முதலாளிகள் மட்டுமே இருந்தார்கள் என்றா?

சரி, சித்தார்த் படிப்பு ஏறாதவர். எதைச் செய்தாலும் முழுக் கவனமும் இல்லாமல் பயத்திலேயே இருப்பவர்போல் காட்டப்பட்டிருக்கிறார். அப்படி இருப்பவருக்காக மொத்த குடும்பமும் அவரவர் பங்குக்கு சில தியாயகங்களைச் செய்கின்றனர். அதில், நன்றாகப் படிக்கக்கூடிய, தன்னம்பிக்கையும் எதிர்காலத்தில் கணினிதான் வளர்ச்சியைக் கொடுக்கும் என்கிற அறிவையும் கொண்ட தங்கையான மீதா ரகுநாத் பி. காம் படிப்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறார். இந்த பி. காம்மை படிக்க எதற்கு மீத்தா கதாபாத்திரத்தை இவ்வளவு புத்திசாலியாகக் காட்ட வேண்டும்? மொத்த சேமிப்பையும் சித்தார்த் படிப்புக்கு செலவிட நினைக்கும் குடும்பம், மீதா நன்றாக படித்து அரசு கல்லூரியிலேயே இடம் வாங்கிவிடுவார் என்பதில் நம்பிக்கை கொள்ளவில்லையா? கதாபாத்திர வளர்ச்சிகளிலும் முரண்களிலும் ஏகப்பட்ட லாஜிக் பிரச்னைகள்.

இந்தக் குழப்பங்கள் ஒருபக்கம் என்றாலும் இரண்டாம் பாதியில் சொந்த வீடு என்கிற கனவைத் தாண்டி வேறு சில பிரச்னைகள் அரைகுறையாகப் பேசப்பட்டிருக்கிறது. இதனால், இறுதியில் உணர்ச்சிப்பூர்வமான இடம் நோக்கி செல்லமுடியவில்லை.

நடிகர் சித்தார்த்துக்கு நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் பெரிய ஆர்வம் இருக்கிறது. இப்படத்தில் நன்றாக நடித்ததுடன் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப உடல்மொழிகளையும் கவனித்து நடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவராக, ஐடி ஊழியராக என பல பரிணாமங்களிலும் நல்ல நடிப்பு.

அவருக்கு இணையான கவனம் ஈர்க்கிறார் சரத் குமார். அவர் உடைந்து கண்ணீர்விடும் காட்சிகளுடன் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை பலமாக அமைந்துள்ளன. மீதா ரகுநாத்துக்கு ஒரு நல்ல காட்சி இருக்கிறது. சிறப்பாக பங்களித்திருக்கிறார். தேவயானியைச் சரியாகப் பயன்படுத்தவில்லை, “சாரி பா, பிளீஸ் பா” என்கிற வசனத்திலேயே பெரும்பாலான காட்சிகள் இருக்கின்றன.

கதையாக நல்ல யோசனையாக இருந்தாலும், அதைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் சில சொதப்பல்களைச் செய்திருக்கிறார். மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படம், தேவையற்ற சில பிரச்னைகளையும் இந்தக் கதைக்குள் பேசப்பட்டதால் முழுமையாக சொந்த வீட்டை நோக்கிய பயணத்தில், ’எங்கே இறக்கிவிடப்பட்டோம்?’ என்கிற எண்ணத்தையே கொடுக்கிறது. இருந்தாலும், சொந்த வீடு குறித்து கனவுகளைச் சுமப்பவர்களின் சுமையைக் காட்டியிருப்பதால் சிலருக்கு உணர்வுப்பூர்வமான படமாகவும் அமையலாம்.

வெளியானது 'தேசிங்குராஜா-2' பட டிரைலர் !

விமல் நடிப்பில் உருவான 'தேசிங்குராஜா-2' படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் நாயகனாகவும் அவ... மேலும் பார்க்க

ஃபஹத் ஃபாசில் - நிவின் பாலி கூட்டணியில் புதிய படம்!

நடிகர் நிவின் பாலி இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்ப... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியான ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஹண்ட் தொடர் ஓடிடியில் வெளியாகியுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் குண்டுவெடிப்பின் ... மேலும் பார்க்க

விம்பிள்டனில் முதல்முறை... துருக்கி வீராங்கனை நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை என்ன?

முதல்முறையாக 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்று துருக்கி வீராங்கனையாக ஜெய்னெப் சான்மெஜ்சாதனை படைத்துள்ளார். புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வர... மேலும் பார்க்க