சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
அமெரிக்காவின் 51-வது மாகாணமாகலாம் கனடா, கிரீன்லாந்து தேவைப்படுகிறது என்றெல்லாம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசும்போது, இவர் எப்போதும்போல தடாலடியாகப் பேசிக்கொண்டிருப்பார், அவ்வளவுதான் என்று நினைத்தது மாறி, அவர் சொல்கிறவை எல்லாம் சீரியஸாகத்தான் என்றாகியிருக்கிறது அவருடைய அடுத்தடுத்த நகர்வுகள்!
“அமெரிக்காவை மீண்டும் ஆகச் சிறந்ததாக மாற்றுங்கள் (மகா) – Make America Great Again - MAGA என்ற முழக்கத்தையே கிரீன்லாந்து மக்களும் நினைக்கிறார்கள் என நான் கேள்விப்படுகிறேன். வியக்க வைக்கிற இடம் கிரீன்லாந்து. நம் நாட்டின் ஒரு பகுதியாக [கிரீன்லாந்து] மாறினால், மாறும்போது அந்த மக்கள் மிகப் பெரும் பலனடைவார்கள். மிகவும் மோசமான இந்த உலகிலிருந்து நாம் அவர்களைப் பாதுகாப்போம்; வளரச் செய்வோம்.”
இப்படிச் சொன்னதுகூட வரும் 20 ஆம் தேதி அதிபராகவுள்ள டிரம்ப்தான்; தன்னுடைய மகன் டிரம்ப் ஜூனியர் கிரீன்லாந்து செல்லும் தகவலைப் பகிர்ந்து, சமூக ஊடகப் பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
கிரீன்லாந்தை டிரம்ப் ஜூனியர் சென்றடைந்தவுடன் மற்றொரு தகவலையும் பகிர்ந்தார் டிரம்ப் – “டான் ஜூனியரும் என்னுடைய பிரதிநிதிகளும் கிரீன்லாந்தைச் சென்றடைந்திருக்கிறார்கள். வரவேற்பு மிகப் பிரமாதம். அவர்களும், சுதந்திர உலகமும் பாதுகாப்பை, பத்திரத் தன்மையை மற்றும் அமைதியை விரும்புகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் ஆகச் சிறந்ததாக மாற்றுங்கள். கிரீன்லாந்தையும் மீண்டும் சிறந்ததாக ஆக்குங்கள்.”
இதே நாளில் இன்னொரு பதிவில் அமெரிக்காவுடன் இணைந்துவிடுமாறு கனடாவுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப், அப்படிச் செய்தால் கட்டணங்கள், வரிகள் எதுவும் இருக்காது. தொடர்ந்து, அவர்கள் நாட்டை வலம்வந்துகொண்டிருக்கும் ரஷிய, சீன கப்பல்களாலும் அவர்களுடைய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பலமிழப்பால் கனடாவில் நிலையற்ற அரசியல் தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் மாகாணமாக கனடாவை மாற்றுங்கள் என்கிற டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் யோசனையை மீண்டும் வலியுறுத்துவது எல்லாம், ‘அமெரிக்காவை மீண்டும் ஆகச் சிறந்ததாக மாற்றுங்கள்’ என்ற குடியரசுக் கட்சியினரின் இலட்சிய முழக்கம் வெறும் தேர்தல்கால அரசியல் – பொருளாதார முழக்கம் மட்டுமல்ல; தெளிவான இலக்கேதான் எனத் தோன்றுகிறது.
புவியியல் அடிப்படையில் கனடாவும் கிரீன்லாந்தும் இணைய நேரிட்டால் அமெரிக்காவின் நிலப்பரப்பானது 2.2 கோடி சதுர கிலோ மீட்டராக, ரஷிய நிலப்பரப்பைவிடவும் அதிகமாகிவிடும் (தற்போது ரஷியாவின் நிலப்பரப்புதான் அதிகம், சுமார் 1.7 கோடி சதுர கி.மீ.).
‘தங்களுடைய எதிர்காலத்தை கிரீன்லாந்து மக்கள் முடிவு செய்ய வேண்டும்; அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற அவர்கள் விரும்புகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்’ என்று அண்மைக்காலமாக டிரம்ப்பின் மனசாட்சியைப் போல பேசிக்கொண்டிருக்கும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே, கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; ஒருபோதும் விற்பனைக்குக் கிடைக்காது என்று கொஞ்சம் காட்டமாகவே கிரீன்லாந்தின் பிரதமர் முச்ச பெ ஈகே எதிர்வினையாற்ற, அமெரிக்காவுடன் இணைவதால் மகிழ்ச்சியடைகிற மக்கள் யாரும் இங்கிருப்பதாகத் தெரியவில்லை என்று கிரீன்லாந்தின் இன்னொரு அரசியல் தலைவரான ஆஸா செம்னிட்ஸும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் பழமைவாத கட்சியைச் சேர்ந்தவரும் அமெரிக்கக் குடியரசுக் கட்சிக்கு நெருக்கமானவர் என்று அறியப்படுகிறவருமான பியர் பொலிவர்கூட, கனடா எப்போதும் அமெரிக்காவின் பகுதியாகாது என்று மறுத்துவிட்டிருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில், டென்மார்க்கின் ஆட்சிப் பகுதியான கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது, பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீட்பது என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ராணுவ அல்லது பொருளாதார நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படும் வாய்ப்புகள் இல்லை என்று உறுதியளிக்க மறுத்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
‘இவற்றில் எதுவொன்றையும் என்னால் உறுதியாகக் கூற இயலாது; ஆனால், ஒன்றைச் சொல்ல முடியும்,பொருளாதார பாதுகாப்பு கருதி அவை (எங்களுக்குத்) தேவைப்படுகின்றன’ என்ற டிரம்ப், ‘கனடா விஷயத்தில் ராணுவத்தைப் பயன்படுத்த மாட்டோம்; பொருளாதார நெருக்குதல் மூலம்தான் எல்லாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
கூடவே சில நாள்களிலேயே, அமெரிக்கக் கொடியைப் போன்ற டிசைனில் – கோடுகள், நட்சத்திரங்களுடன் - கனடாவும் இணைந்திருக்கிற மாதிரியில் அமெரிக்காவின் படம் ஒன்றையும் தனது சமூக ஊடகமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ளதுடன், ‘செயற்கையாக வரையப்பட்ட அந்தக் கோட்டை (எல்லைக் கோட்டை) எடுத்துவிட்டுப் பாருங்கள்; எவ்வளவு அழகாக இருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கும் நல்லது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதற்கும் இருக்கட்டுமென, இப்படியெல்லாம் ‘எல்லையை மீறி ஆடுவது’ கொஞ்சம்கூட நன்றாக இல்லை என்று இன்னமும் பதவியேற்காத டிரம்ப்பை நோக்கி பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பை, அதிருப்தியைப் பதிவு செய்துவைத்திருக்கின்றன.
மற்றொரு நாளில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இன்னொரு புதிய குண்டையும் வீசினார் டிரம்ப் – ‘மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம்’ என்றதுடன், ‘இந்தப் பெயர் எவ்வளவு அழகாக இருக்கிறது’ என்று அவரே வியந்தும்கொண்டார். ‘பாருங்கள், இது மிகப் பொருத்தமானது, மிகவும் பொருத்தமானது’ என்றும் குறிப்பிட்ட டிரம்ப், இதற்கான நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்று எதுவும் குறிப்பிடவில்லை.
ஆனால், இந்தக் கருத்துக்குக் கொஞ்சம் சூடாகவே பதிலடி கொடுத்துள்ள மெக்சிகோ நாட்டின் அதிபர் கிளாடியா ஷெயின்பாம், அந்தக் கால மெக்சிகோ நாட்டின் பழைய வரைபடம் ஒன்றை விரித்துப்போட்டு - தற்போது அமெரிக்காவில் இடம் பெற்றுள்ள மாகாணங்களான டெக்சாஸ், அரிசோனா, நெவாடா, நியு மெக்சிகோ, கலிபோர்னியா ஆகியவை எல்லாம் வரைபடத்தில் பழைய மெக்சிகோவுக்குள் இருக்கின்றன – ‘மெக்சிகன் அமெரிக்கா, கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா?’ குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஆட்சிக் காலத்திலேயே மெக்சிகோவுடனான அதிபர் டிரம்ப்பின் உறவு என்பது எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகள், இறக்குமதிப் பொருள்கள் மீதான வரிகள் என, ஏழாம் பொருத்தம்தான். அமெரிக்க – மெக்சிகோ எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்; அதற்கு மெக்சிகோதான் பணம் தர வேண்டும் என்ற அவர், ஆட்சிக்காலத்தில் 724 கி.மீ. நீளத்துக்கு சுவரும் கட்டினார்.
இந்தக் கடுப்பின் தொடர்ச்சியாகவோ என்னவோ இப்போது, நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் துலங்கிவரும் பெயரான மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
நாடுகளை, நிலப்பரப்புகளை ராணுவ நடவடிக்கை மூலமும் விலைகொடுத்தும் வாங்குவது ஒன்றும் அமெரிக்காவுக்குப் புதிதல்ல.
21 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள லூசியானாவை 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து பிரான்ஸிடமிருந்தும், 1.86 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள ப்ளோரிடாவை 5 மில்லியன் டாலர்கள் கொடுத்து ஸ்பெயினிடமிருந்தும், 15 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள அலாஸ்காவை 7.2 மில்லியன் டாலர்கள் கொடுத்து ரஷியாவிடமும், 352 சதுர கி.மீ. பரப்புள்ள வர்ஜின் தீவுகளை 25 மில்லியன் டாலர்கள் கொடுத்து டென்மார்க்கிடமும் விலைக்குத்தான் வாங்கியது அமெரிக்கா! 9 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள ப்யூர்தோ ரிகாவை ராணுவ தாக்குதல் மூலம் ஸ்பெயினிடமிருந்து எடுத்துக்கொண்டது – ஆனால், இவை எல்லாமே நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்!
டிரம்ப் பேசுகிற பேச்சைப் பார்த்தால் டென்மார்க்கிடம் என்ன விலை கொடுத்து வேண்டுமானாலும் கிரீன்லாந்தை வாங்கத் தயாராகத்தான் இருக்கிறார் போல; அல்லது என்ன நேரிட்டாலும் பரவாயில்லை என்று ராணுவத்தைப் பயன்படுத்திக் கைப்பற்றினாலும் வியப்பதற்கில்லை.
இன்னமும் கொஞ்சமும் திறக்கப்படாத – அள்ள அள்ளக் குறையாத தங்கச் சுரங்கத்தைப் போன்றது கிரீன்லாந்து.
சுமார் 56 ஆயிரம் பேர் மக்கள் மட்டுமே வாழ்கிற கிரீன்லாந்தின் பரப்பளவோ 21 லட்சம் சதுர கி.மீ.! கிட்டத்தட்ட 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பரப்பைக் கனமான - கரையாத பனிப்பாறைகள் மூடியிருக்கின்றன. இங்கே கனிம வளங்களும் இயற்கை எரிவாயுவும் திரண்டுகிடக்கின்றன.
எல்லாவற்றுக்கும் டென்மார்க்கையே நம்பியுள்ள தன்னாட்சிப் பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தோ முழு விடுதலையை வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் என்னென்ன அரசியல் சித்து விளையாட்டெல்லாம் விளையாடப் போகின்றனவோ? அமெரிக்காவும் அதிபராகும் டொனால்ட் டிரம்ப்பும் எப்படி ஆடப் போகிறார்களோ?
ஏற்கெனவே, அமெரிக்கா ஒப்படைத்த பனாமா கால்வாயைத் தேவைப்பட்டால் எந்தக் கேள்விக்கும் இடங்கொடுக்காமல் உடனடியாகவும் முழுமையாகவும் அமெரிக்காவுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் டிரம்ப். இதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில் பனாமா அதிபர் ஜோஸே ரௌல் முலீனோ, கால்வாய், பனாமாவுக்குச் சொந்தம், அது தொடரும் என்று குறிப்பிட்டபோது, அதையும்தான் பார்க்கலாமே என்று திருப்பியடித்திருக்கிறார் டிரம்ப்.
(1900-களின் தொடக்கத்தில் அமெரிக்கா உருவாக்கிய - பசிபிக் – அட்லான்டிக் பெருங்கடல்களை இணைக்கும் - இந்தக் கால்வாயை, அதன் உரிமையையும் கட்டுப்பாட்டையும், 1977-ல் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் செய்துகொண்டதோர் உடன்பாட்டின்படி 1999, டிச. 31-ல் பனாமாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா).
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதிதான் பொறுப்பேற்கப் போகிறார் டொனால்ட் டிரம்ப் (குற்றவாளிதான், ஆனால், தண்டனை எதுவுமில்லை என்றொரு நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது – அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் அதிபராகிறார்). ஆனால், அதற்குள்ளாகவே அதிரடியான அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இனிமேல் இவற்றில் எதையுமே வெற்றுப் பேச்சுகளாக எடுத்துக்கொள்ள முடியாது, எடுத்துக் கொள்ளவும் கூடாது. ஏனெனில் இன்னும் சில நாள்களில் அவர்தான் அமெரிக்காவின் அதிபர்!
ஆக, நெருப்பு இருக்கிறது; மகா அமெரிக்காவை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பும் இருக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாகப் புகைந்துகொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எரியத் தொடங்கலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் டிரம்ப்; விரைவில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளைப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.
* * *
வெல்க தருமிகள்!
தொடர்பான விழாவொன்றில் பேசியபோது, சிந்துவெளி எழுத்துப் புதிர்களை விடுவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள் (நம்மூர் மதிப்பில் ரூபாய் 8.6 கோடி, ரூபாய் மதிப்பு போகிற போக்கில் பரிசு கொடுக்கிற காலத்தில் 10 கோடி ரூபாயெல்லாம்கூட தாண்டிவிட வாய்ப்புள்ளது!) பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு – கி.மு. 2,600 முதல் கி.மு. 1700 வரை - முந்தைய நாகரிகம் இதுவெனக் கணக்கிடப்படுகிறது. பதினைந்து லட்சம் சதுர கி.மீ. பரப்பில் ஐம்பது லட்சம் மக்கள் வரையிலும் வசித்திருக்கலாம்.
மேம்பட்ட நகர்ப்புற நாகரிகம். இங்கே தமிழ் எழுத்துகளின் முற்கால வடிவங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிற எழுத்து வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. நிறைய கீறல்கள், குறியீடுகள், சித்திரங்கள், முத்திரைகள் எல்லாமும். ஆனால், இன்னமும் வரியாக – சொற்றொடராக எதுவும் கிடைக்கவில்லை.
இதுவரையிலும் சிந்துவெளி எழுத்துகளை எத்தனையோ பேர் விளக்க முயன்றிருக்கிறார்கள்; சிறப்பாக விளக்கியும் இருக்கிறார்கள், கிடைத்தவற்றை, இருக்கிறவற்றை வைத்துக்கொண்டு - முடிந்த முடிவாக எதையும் கூறிவிட இயலாத நிலை.
ரூ. 10 கோடி பரிசு பெற யார், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இருக்கிறதை வைத்துதான் உருட்ட வேண்டியிருக்கும். ஏனெனில், இந்த நாகரிகத்தின் மையப் பகுதிகளெனக் கருதப்படும் மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும் இருக்கும் இடங்கள், தற்போது பாகிஸ்தானிலுள்ள சிந்து, பஞ்சாப் மாகாணங்கள். சில துண்டுகள் இந்தியாவுக்குள்ளும் இருக்கின்றன, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில்.
இங்கேயிருக்கிற கீழடியிலேயே இன்னமும் விரிவான - ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம் நாம்; ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசையும் தொல்லியல் துறையையும் பிடித்துத் தொங்கிக்கொண்டு!
இத்தகைய சூழலில்தான் சிந்துவெளி நாகரிகத்தின் முடிச்சுகளை விடுவிக்கும் முயற்சி! அனேகமாகத் திருவிளையாடல் திரைப்படத் தருமி போல நிறைய பேர் பரிசிலுக்குத் துரத்தும் காலமும் வரலாம்!
ஜன கன மண!
தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பேசுகிறவர்கள்கூட சும்மா பேசும்போது, சட்டுபுட்டுனு ஜனகனமண போட்டு முடியுங்கப்பா என்பார்கள். ஏனென்றால், இங்கே எதுவொன்றையும் முடிக்கும்போதுதான் ஜன கன மண போடுவார்கள், பாடுவார்கள். சின்னக் குழந்தைகளாகப் பள்ளிக்கூடங்களிலிருந்து நம்மில் பலரும் அப்படித்தான் பார்த்து, கேட்டு வந்திருக்கிறார்கள்.
தேசிய அளவில், வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகள் போன்ற அரசு நிகழ்வுகளில் தொடக்கம், முடிவு இரண்டு முறையுமே இசையாக தேசிய கீதம் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம்.
ஆண்டுத் தொடக்கக் கூட்டம் என்பதால் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, திடீரென சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும்போது, தேசிய கீதம் இசைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து, உரையை வாசிக்காமலேயே புறப்பட்டுப் போய்விட்டார். அப்படி ஒரு மரபே தமிழ்நாட்டில் இல்லை; தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம். அதுதான் வழமுறை. ஆளுநர் வேண்டுமென்றே செய்கிறார் என்று அரசுத் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதிலாக பாரதிதாசன் பாடலை – புதுச்சேரிக்கான வாழ்த்துப் பாடல் - பாடித் தொடங்கியிருக்கிறார்கள். ஒரே கண்டனங்கள், விமர்சனங்கள். இவற்றால் என்ன சாதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. என்னவோ பாடல்களுக்கு வந்த சோதனை... ஸ்ஸ்ஸ்ஸப்பா!
உழைப்பாளி!
நம்ம நாட்டிலே ஏற்கெனவே பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் 18 மணி நேரம், 20 மணி நேரம் என்று நமக்காக உண்ணாமல் உறங்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமும் முடிந்தவரை உழைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அவ்வப்போது, வாரத்தில் 6 நாள்கள் வேலை, ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைப்பு, நாட்டின் முன்னேற்றம் என்றெல்லாம் இன்போசிஸ் நாராயணமூர்த்திதான் கூறிக் கொண்டிருப்பார்!
இப்போது திடீரென இவருக்குப் போட்டியாக இன்னொருவர் புறப்பட்டிருக்கிறார், லார்சன் அன்ட் ட்யூப்ரோ தலைவர் எஸ்.என். சுப்ரமண்யன்! எவ்வளவு நேரந்தாங்க மனைவியுடனேயே இருக்க முடியும்? ஸோ, எல்லாரும் ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வேண்டும் என்றோர் அரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இனிமேல வீட்டோட, ஸாரி, ஆபிஸோட மாப்பிள்ளையா வந்துருங்கன்னு சொல்லாம இருந்தா சரிதான்!
இந்த மாதிரியானவற்றை எல்லாம் அலசிக்கொண்டிருக்கும் வேளையில் என்னென்ன முக்கியமான பிரச்சினைகள் எல்லாம் மக்கள் கவனத்தைவிட்டு நழுவிப் போய்க் கொண்டிருக்கின்றன... ஜிஎஸ்டி, ரூபாய் மதிப்பு, அரிட்டாபட்டி டங்ஸ்டன், அண்ணா பல்கலைக்கழகம், அப்புறம் நிறைய புள்ளி புள்ளி புள்ளி!