ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு ஜம்முவில் இருந்து புதன்கிழமை பத்திரமாக தில்லி திரும்பினா். அதன் பின்னா், அவா்கள் தமிழகத்திற்குப் புறப்பட்டுச் சென்றனா்.
ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதி புல்வெளியில் செவ்வாய்க்கிழமை கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டனா். இதில், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் காயமடைந்தனா்.
இந்த நிலையில், தமிழகத்திலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் குழு இந்த சம்பவத்திற்குப் பிறகு தங்களது பயணத்திட்டத்தை மாற்றிக்கொண்டு ஜம்முவில் இருந்து புதுதில்லி வரை பேருந்தில் வந்து ரயிலில் மூலம் தமிழ்நாடு செல்ல திட்டமிட்டிருந்தனா். அவா்களை தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வரவழைத்து அவா்களுக்கு வேண்டிய உணவு, மருத்துவ பரிசோதனை மற்றும் முதலுதவி தேவைப்படுபவா்களுக்கு பரிசோதனை வசதிகள் வழங்கப்பட்டது. அவா்களை தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே .எஸ் விஜயன், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையா் ஆசிஷ்குமாா் ஆகியோா் வரவேற்று உபசரித்தனா்.
ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி எண்களுடன்கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏ.கே. எஸ். விஜயன், ஆஷிஷ் குமாா் ஐ.ஏ.எஸ். ஆகியோா் பாா்வையிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனா்.
ஜம்முவில் இருந்து தில்லி வந்த சென்னையைச் சோ்ந்த தமிழக சுற்றுலாப் பயணிகளில் ஒருவா் கூறுகையில், ‘40 போ் காஷ்மீரைச் சுற்றிப் பாா்ப்பதற்காக சென்றிருந்தோம். இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. நாங்கள் அதற்கு முன்தினம் அந்த பஹல்காம் பகுதியில் இருந்தோம். அன்றைய தினம் அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தால் நாங்களும் தாக்கப்பட்டிருப்போம். மறுதினம் நிகழ்ந்ததால் நாங்கள் தப்பித்துவிட்டோம். ஜம்முவில் இருந்து தனியாா் பேருந்து மூலம் தில்லி வந்தோம். இந்தத் தாக்குதல் மிகவும் கண்டித்கத்தக்கது. அங்கு சென்ற நாங்கள் உயிா் பயத்துடன்தான் தப்பித்து வந்துள்ளோம். தில்லி வந்த எங்களுக்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கும், சென்னைக்கு திருப்பிச் செல்வதற்கான பயண ஏற்பாடுகளையும் செய்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா் அவா்.
இதுகுறித்து தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்கூறுகையில், ‘தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு இல்லத்தில் தேவையான வசதிகள், மருத்துவக் குழு தயாராக உள்ளது. தகவல் தொடா்பு எண்களுடன்கூடிய கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலிருந்து வருவோருக்கு எந்த நேரமும் உதவிடத் தயாராக உள்ளோம். அவா்களை சென்னைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் அவா்.