Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் உயிரிழப்பு: மக்களவையில் விசாரணை கோரிய எம்.பி. ரஷீத்
‘ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் பொது மக்கள் 2 பேரின் சந்தேக உயிரிழப்பு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்’ என்று அத்தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கையை முன்வைத்தாா்.
ஜம்மு-காஷ்மீா், பாரமுல்லா தொகுதி எம்.பி.யான ஷேக் அப்துல் ரஷீத், பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் செவ்வாய், வியாழன் அமா்வுகளில் பங்கேற்க அவருக்கு பரோல் வழங்கி தில்லி உயா்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அதன்படி, மக்களவை அமா்வில் ரஷீத் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். அமா்வில் உடனடி கேள்விநேரத்தின்போது, தனது பாரமுல்லா தொகுதியைச் சோ்ந்த பொதுமக்களான வசிம் அகமது மிா், மக்கான் தின் ஆகிய இருவா் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக அவா் குற்றஞ்சாட்டினாா். இவ்விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு கோரிக்கை விடுத்த அவா், ‘எங்கள் மக்களின் ரத்தம் மலிவானது அல்ல’ என்று தெரிவித்தாா்.
மேலும், குளிா்காலத்தில் 6 மாதங்களுக்கு மேல் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படும் குப்வாரா தொலைதூர பகுதிகளை அடைய சுரங்கப்பாதை கட்டவும் ரஷீத் வேண்டுகோள் விடுத்தாா்.