ஜம்மு - காஷ்மீர்: பாகிஸ்தான் தாக்குதலில் பெண் பலி!
ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு சர்வ சாதாரணமாக இந்தியா முறியடித்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனிடையே, எல்லையோரப் பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஊரியில் உள்ள மொஹுரா அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கார் மீது குண்டு பாய்ந்ததில் நர்கீஸ் பேகம் என்பவர் பலியானார். மேலும், காயமடைந்த ஹஃபீசா என்ற மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் மற்றும் 13 பொதுமக்கள என மொத்தம் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.