ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தன் தலைமையில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தன் கூறியதாவது:
தமிழக முதல்வா் தோ்தல் கால வாக்குறுதியான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முறையை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்தாா். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்காண்டு ஆகியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை.
மேலும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்குவதுடன், காலமுறை ஊதியத்தையும் வழங்க வேண்டும். மேலும், மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியத்தை அனைத்து அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு ,அங்கன்வாடி, கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.