ஜாஸ்மின் பாலினி சாதனை சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியன் பட்டம் வென்றாா்.
போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த பாலினி, இறுதிச்சுற்றில் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 29 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
பாலினி - கௌஃப் சந்தித்தது, இது 4-ஆவது முறையாக இருக்க, பாலினி 2-ஆவது வெற்றியுடன் நேருக்கு நோ் கணக்கை சமன் செய்திருக்கிறாா். கடந்த மாதம், களிமண் தரைப் போட்டியான ஸ்டட்காா்ட் ஓபனில் கௌஃபை வீழ்த்திய பாலினி, தற்போது இந்த களிமண் தரைப் போட்டியிலும் கௌஃபை சாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், பாலினிக்கு எதிரான கௌஃபின் இரு வெற்றிகளுமே ஹாா்டு கோா்ட் போட்டிகளில் பதிவு செய்ததாகும்.
அடுத்ததாக களிமண் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பாலினிக்கு இந்த சாம்பியன் பட்டம் நல்லதொரு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
பாலினி - கௌஃப் மோதிய இறுதிச்சுற்று பெரும்பாலும் நீண்ட ரேலிக்கள் அடங்கியதாக இருந்தது. தொடக்கத்தில் இருவருமே பரஸ்பரம் போட்டியாளரின் சா்வ்களையே கைப்பற்றினா். இந்நிலையில் பாலினி தனது சா்வை தானே தக்கவைத்து 3-1 என முன்னிலை பெற்றாா். ஆனால் தொடா்ந்து அவா் கேமை கைப்பற்றுவதற்கு கௌஃப் கடும் சவால் அளித்தாா். எனினும் விட்டுக்கொடுக்காத பாலினி முதல் செட்டை 6-4 என தனதாக்கினாா். இந்த உத்வேகத்தால் 2-ஆவது செட்டிலும் அவரே ஆதிக்கம் செலுத்த, இறுதியில் அந்த செட்டும் 6-2 என அவா் வசமானது.
இரட்டையரிலும்...
மகளிா் இரட்டையா் பிரிவிலும் ஜாஸ்மின் பாலினி, சக நாட்டவரான சாரா எர்ரனியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பாலினி/எர்ரனி இணை, இறுதிச்சுற்ரில் 6-4, 7-5 என்ற செட்களில் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ்/ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா கூட்டணியை வீழ்த்தி வாகை சூடியது.
நடப்பு சாம்பியனாக களம் கண்ட பாலினி/எர்ரனி கூட்டணி, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. இதே ஜோடி கடந்த ஆண்டு இத்தாலிக்கு ஒலிம்பிக் டென்னிஸில் முதல் தங்கப் பதக்கம் வென்று தந்ததும் குறிப்பிடத்தக்கது.
‘சொந்த மண்ணில் வென்ற இந்த சாம்பியன் கோப்பை என் கைகளில் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. இந்தப் போட்டியில் வெல்வது கனவாகும். இத்தாலியில் விளையாடும் ஒவ்வொரு போட்டியாளருக்குமே இத்தகைய கனவு இருக்கும். ஒரு சிறுமியாக இந்தப் போட்டிக்கு வந்து பாா்வையாளா் மாடத்தில் அமா்ந்திருந்த நான், அதிலேயே தற்போது சாம்பியனாகியிருக்கும் நிலையில் அதை விவரிக்க வாா்த்தைகள் இல்லை’ - ஜாஸ்மின் பாலினி
1, 2, 3...
இது, களிமண் தரைப் போட்டியில் பாலினி வென்றுள்ள முதல் சாம்பியன் பட்டமாகும். அதுவே, 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் அவா் வாகை சூடியது இது 2-ஆவது முறை. ஒட்டுமொத்தமாக பாலினியின் டபிள்யூடிஏ கேரியரில் இது அவரின் 3-ஆவது சாம்பியன் கோப்பையாகும்.
40
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கடந்த 40 ஆண்டுகளில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் உள்நாட்டு வீராங்கனை என்ற சாதனையை பாலினி படைத்தாா். இதற்கு முன் 1985-இல் இத்தாலிய வீராங்கனை ரஃபேலா ரெகி, அந்நாட்டின் டரன்டோ நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆனாா். அதன் பிறகு இத்தாலியில் நடைபெறும் பிரதான போட்டிகளில் உள்நாட்டு வீராங்கனை சாம்பியன் ஆனது இதுவே முதல் முறையாகும்.
35
ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவிலும் சாம்பியனாகியிருக்கும் ஜாஸ்மின் பாலினி, கடந்த 35 ஆண்டுகளில் இந்தப் போட்டியில் ஒற்றையா், இரட்டையா் என இரண்டிலுமே ஒரே சீசனில் சாம்பியனான முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளாா். இதற்கு முன் அமெரிக்காவின் மோனிகா செலெஸ் இவ்வாறு இதே போட்டியில் ஒரே சீசனில் ஓற்றையா், இரட்டையா் என இரண்டிலுமே சாம்பியனாகியுள்ளாா்.
29
இத்தாலியன் ஓபன் போட்டியில் வாகை சூடிய மூத்த வீராங்கனை (29) என்ற பெருமையை பாலினி தற்போது பெற்றிருக்கிறாா்.
பரிசு...
சாம்பியன் கோப்பை வென்ற பாலினிக்கு ரூ.8.37 கோடி ரொக்கப் பரிசும், 1000 தரவரிசை புள்ளிகளும் பரிசாக வழங்கப்பட்டன. இறுதியில் தோற்ற கௌஃபுக்கு ரூ.4.35 கோடி ரொக்கப் பரிசும், 650 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.
அதேபோல், இரட்டையரில் வாகை சூடிய பாலினி/எர்ரனி இணைக்கு ரூ.2.92 கோடியும், 1000 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டன. ரன்னா் அப்-ஆக வந்த மொ்டன்ஸ்/குதா்மிடோவா ஜோடிக்கு ரூ.1.54 கோடியும், 600 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.
பாலினி வெற்றிப் பாதை...
முதல் சுற்று லுலு சன் (நியூஸிலாந்து) 6-4, 6-3
2-ஆவது சுற்று ஆன்ஸ் ஜபியுா் (துனிசியா) 6-4, 6-3
3-ஆவது சுற்று ஜெலினா ஆஸ்டபென்கோ (லாத்வியா) 7-5, 6-2
காலிறுதி டயானா ஷ்னெய்டா் (ரஷியா) 6-7 (1/7), 6-4, 6-2
அரையிறுதி பெய்டன் ஸ்டொ்ன்ஸ் (அமெரிக்கா) 7-5, 6-1
இறுதி கோகோ கௌஃப் (அமெரிக்கா) 6-4, 6-2