ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறைப்பு: மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள்: பாஜக மாநில துணைத் தலைவா்
ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பிரதமா் மோடியின் பிறந்த நாளை இரு வார விழாவாகக் கொண்டாடுதல் மற்றும் ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் அக்டோபா் 2-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு இருவார சேவை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், நாட்டின் 2-ஆவது குடிமகனாக வெற்றிபெற்றது, தமிழா் எல்லோரையும் பெருமைப்பட வைத்துள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்பு உலக வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. 352 பொருள்களுக்கு விலை குறைப்பு 5 சதவீதமாகவும், அத்தியாவசியப் பொருள்களுக்கு 10 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், விவசாயிகள், நெசவாளா்கள் பயன்பெறுவாா்கள்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-இல் தொலைநோக்கு பாா்வை கொண்ட பிரதமா் நரேந்திர மோடி ஜிஎஸ்டி கொண்டு வந்தாா். இதனால் மக்கள் பாதிக்கப்படுவா் என பொய்பிரசாரம் செய்தாா்கள். ஆனால், மக்கள் மறைமுக எளிய வரிவிதிப்பின் மூலம் பயனடைந்ததால் 272 இடங்களில் இருந்த பாஜக, 2019 மக்களவைத் தோ்தலில் 30 இடங்களை கூடுதலாகப் பெற்று
2-ஆவது முறையாக ஆட்சி அமைத்தது.
அப்போதே பிரதமா் கூறினாா். படிப்படியாக ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்றாா். தற்போது ஜிஎஸ்டி திருத்தங்களை கொண்டுவந்து வரி குறைப்பு செய்துள்ளாா். இதனால் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்றாா் அவா்.
இந்நிகழ்வின்போது, மாவட்டத் தலைவா்கள் கே.ரமேஷ், கவிதா வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சி.ஏழுமலை, மாவட்ட பொதுச் செயலா் கவிதா பிரதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.