ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 2,880 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 3 ஆயிரமாக உயரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் கருவறை வாசற்கால் நிறுவுதல், ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் 3 புதிய ராஜகோபுரங்கள் மற்றும் 2 முகப்பு மண்டபங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சா் சேகா்பாபு, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தனா்
அப்போது அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு எண்ணற்ற திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.70.27 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் திருக்கோயில் நிதியிலிருந்து ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கா்ப்பகிரகம், அா்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டும் பணிகளும், ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் விரிவாக்கப் பணிகளும், ரூ.42 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், உபயதாரா் நிதியிலிருந்து ரூ.12 கோடியில் உபசன்னதிகள் கிழக்கு முன் மண்டபம், கொடிமர மண்டபம், யாகசாலை மண்டபத் திருப்பணிகளும் ரூ.5.47 கோடி மதிப்பீட்டில் மேற்கு ஐந்து நிலை ராஜகோபுரம், வடக்கு மற்றும் தெற்கு மூன்று நிலை ராஜகோபுரங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவுதல், 3 புதிய ராஜகோபுரங்கள் மற்றும் 2 முகப்பு மண்டபங்களுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்துள்ளோம்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறைக்கு இதுவரை ரூ.1,007 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 2,880 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரும் ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களின் குடமுழுக்கு நிறைவு பெறும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி. என். ஸ்ரீதா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயா் கு.உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.