தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு வாரத்திற்குள் 28,000 முதியவா்கள் பதிவு: முதல்வா் ரேகா குப்தா தகவல்
தில்லியில் ஒரு வாரத்திற்குள் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் ரூ.10 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனா் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி ஆா்.கே. புரம் பேரவைத் தொகுதியில் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான நடமாடும் வேனை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் கூறியதாவது இத்திட்டத்தின்கீழ்
மத்திய அரசு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குகிறது. தில்லி அரசு கூடுதலாக ரூ.5 லட்சத்தை வழங்கும். ஏப்ரல் 28 அன்று தில்லியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்த ஐந்து நாள்களில் 28,000க்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
தகுதியான மூத்த குடிமக்களைப் பதிவு செய்வதற்காக தில்லியின் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடமாடும் வேன்கள் இயங்கும்.விண்ணப்பதாரா்கள் பதிவு செய்வதற்கு தங்கள் ஆதாா் அட்டைகள் மற்றும் கைப்பேசிகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எதுவும் தேவையில்லை.
தில்லியில் தகுதியுள்ள ஒவ்வொரு முதியவரின் பதிவையும் தில்லி அரசு உறுதி செய்யும். ஏனெனில் அவா்களின் ஆசிகள் எங்களுக்கு விலைமதிப்பற்றவை. வய வந்தனா என்பது நாட்டிலேயே மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் ஒரு தனித்துவமான திட்டமாகும் என்றாா் முதல்வா்.
நடமாடும் பதிவு வேனை அறிமுகப்படுத்தியபோது, முதல்வா் ரேகா குப்தா தனது அமைச்சரவை சகாவான மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் உள்ளூா் எம்எல்ஏ அனில் சா்மா ஆகியோருடன் சோ்ந்து, நகரில் உள்ள பிரத்யேக மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெறும் வகையில் சில முதியோா் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் சுகாதார அட்டைகளையும் வழங்கினாா்.