ஜெயலலிதா, பானுமதி, சாவித்ரியை ஃபாலோ செய்யும் நயன்தாரா, வாணி போஜன் - ரிப்பீட் மோடில் ஃபேஷன் டிரெண்ட்!
அது ஒரு கேஷுவல் ஷாப்பிங் நாள்.
ஒரு பிரபல மால்ல இருக்க பிராண்டட் டிரஸ் கடைக்கு விசிட் அடிச்சேன். அங்கே ஒரு வெள்ளை கலர் டீ சர்ட்டும், ஆலிவ் கிரீன் கலர் பேகி பேண்டும் என்னை 'வா... வா...'னு கூப்பிட, அதை ட்ரைல் பாத்து, பில் போட்டுட்டேன்.
ஆசையா ஆசையா அம்மா கிட்டப்போய் பேகி பேன்டை காமிச்சு, "அம்மா... இது தான் இப்போ டிரெண்டு. எப்படி இருக்கு?'னு கேட்டா, என்னை ஏற, இறங்க பாத்து..
"இது பேகி பேன்ட். இப்போ டிரெண்டா? இதெல்லாம் எங்க காலத்துலேயே டிரெண்டு தான். சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில் பாட்டை கேளு'னு அசால்டா என்னையும், அந்தப் பேன்டையும் ஹேண்டில் பண்ணாங்க.

'என்னடா இது'னு உடனே, அந்தப் பாட்டை கேட்கும்போது, அதுல வந்த வரிகள்...
"நாங்க ஜீன்ஸ் பேன்டைத் தான் போட்டாக்கா
நீங்க பேகி பேன்ட்டைத் தான் பார்ப்பீங்க
நாங்க பேகி பேன்டைத் தான் போட்டாக்கா
நீங்க வேட்டியைத் தான் தேடுவீங்க"
அதுவரைக்கும் இந்தப் பாட்டை எத்தனையோ ஆயிரம் தடவை கேட்டுருப்பேன். ஆனா, அம்மா சொன்னதுனால தான், அது எனக்கு டக்குனு ஸ்டிரைக் ஆச்சு.
என்னால ஆச்சரியத்தை தாங்க முடியல. இப்போ தான் பேகி பேன்ட் டிரெண்ட் புதுசுனு பாத்தா, 1993-ல வந்த ஜென்டில் மேன் படம் வந்தப்பவே பேகி பேன்ட் இருந்திருக்கு. அப்படி இப்போ டிரெண்ட்ல இருக்க என்னென்ன அப்போவே இருந்துருக்கு என்பதற்கான தேடல் இதோ...
பெல் ஸ்லீவ்
கையில முட்டிக்கு பக்கத்துல மட்டும் கொஞ்சம் ஃப்ரீ ஸ்ஃடைல்ல இருக்குறது பெல் ஸ்லீவ். இன்னும் புரியாதவங்க இந்தப் போட்டோவை பாத்து தெரிஞ்சுக்கோங்க. தன்னை டிரெண்டியா காட்ட விரும்புற கேர்ஸ்ஸோட சாய்ஸா இப்போ பெல் ஸ்லீவ் களமிறங்கியிருக்கு.
பிளவுஸ், கிராப் டாப்ல இந்தப் பேட்டர்னை ஃபாலோ பண்றாங்க. இதோட வரலாறு தான் அல்ட்டீமேட்... இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியாவின் காங்கிரஸ் பிறப்பில் முக்கிய பங்கு வகித்தவங்க அன்னி பெசன்ட் அம்மையாரை நம்ம எல்லாத்துக்கும் தெரியும். கூகுள்ல அவங்க போட்டோவ தேடுனப்போ அவங்க தன்னோட கவுனுக்கு பெல் ஸ்லீவ் யூஸ் பண்ணிருக்ககாங்க. இது ஷாக்குக்கே ஷாக் கொடுக்கற மொமெண்ட்.

போட் நெக் பிளவுஸ்
கொஞ்ச வருசங்களாவே, போட் நெக் பிளவுஸ் ரொம்ப ஃபேமஸ். நயன்தாரா தொடங்கி சினேகா வரை எல்லாருடைய புரோஃபைலையும் போட் நெக் பிளவுஸ்ஸ பார்க்கலாம். அறம் படத்துல நயன்தாரா இந்த பிளவுஸ் யூஸ் பண்ணதுக்கு அப்புறம் இந்த பிளவுஸுக்கு கேர்ள்ஸ் மத்தியில இன்னும் ஹைப் அதிகமாகிருச்சு.
போட் நெக் 2கே கண்டுபிடிப்புனு தான் நினைக்கிறீங்க. அதுதான் இல்ல... 70-கள்ல ரிலீஸ் ஆன நிறைய படங்கள்ல நடிகை சாவித்ரி, பானுமதியெல்லாம் ஃபாலோ பண்ண ஃபேஷன் இது. அந்த அளவுக்கு இந்த பிளவுஸ் ரொம்ப பழசு. ஐ மீன்... இந்த பிளவுஸ் பேட்டர்ன் பழசு.
இப்போ பணக்கார ரோல்ல நடிக்கிற ஒரு பொண்ணுக்கு கூலிங் கிளாஸ், கார், ஹை ஹீல்ஸ் இதெல்லாம் அடையாளமா இருக்குற மாதிரி அந்தக் காலத்துல பெரிய பணக்கார வீட்டு பெண்மணிகளை காட்டணும்னா போட் நெக் பிளவுஸ்களும் அடையளாமா இருந்திருக்கு.

3/4th ஸ்லீவ்
தெய்வ மகள் வாணி போஜன் ஆரம்பிச்சு தமிழும் சரஸ்வதியும் நட்சத்திரா வரை சீரியலில் பல நடிகைகள் தங்களோட பிளவுஸ் பேட்டர்னா 3/4th ஸ்லீவை ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்க. காட்டன் புடவைகளுக்கு இந்த பிளவுஸ் பக்காவா மேட்ச் ஆகும்.
இந்த டிரெண்டுக்கு ஃபிளாஷ்பேக் சொல்லணும்னா புதிய பறவை படத்தின் 'பார்த்த ஞாபகம் இல்லையோ...' பாட்டை நீங்க பார்க்கணும். அட ஆமாங்க அந்த பாட்டுல நம்ம சௌகார் ஜானகி அம்மா அதே பேட்டர்னை யூஸ் பண்ணிருக்காங்க... பார்த்த நியாபகம் இல்லையோ...

ஷார்ட் டாப்ஸ்
இப்போ நிறைய கேர்ள்ஸோட சாய்ஸ் ஷார்ட் டாப். ஜீன், ஸ்கர்ட்னு எல்லாத்துக்கும் ஒரு ஷார்ட் டாப்பை மேட்ச் பண்ண்க்க முடியும். இதை டிரெண்ட் ஆக்குனதுல முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முக்கிய பங்குண்டு... பார்த்து கொண்டதுக்கு கண்ணுக்கு கண்ணு தொடங்கி பல பாடல்கள்ல ஜெயலலிதா ஷார்ட் டாப் போட்டு ஃபேஷன் ஐகானா இருந்திருக்காங்க.

ஸ்டெப் கவுன்
ஷார்ட் கவுன், லேயர் கவுன் என பல டைப் கவுன் வந்தாலும் 90'ஸ் கிட்ஸோட ஃபேவரைட் ஸ்டெப் கவுன் தான். அம்மாவோட சேலைய கொடுத்தாவது ஸ்டெப் கவுன் தெச்சு வாங்குன அனுபவம் 90'ஸ் ல பொறந்த கேர்ஸ்க்கு நிச்சயம் இருக்கும். 'இது எந்த படத்துல எந்த ஹீரோயின் போட்ருக்காங்க?'னு நினைக்கிறீங்களா... இங்க சேஞ்சுக்கு அதே கண்கள் படத்துல நடிகர் நாகேஷ் ஒரு சீன்ல ஸ்டெப் கவுன் போட்டு அசத்திருக்காரு. சும்மா அதிருதுல!
அதே படத்துல ஷார்ட் கவுன், டி - ஷர்ட் - பேன்ட், ஸ்லீவ்லஸ் டாப், மேக்ஸினு நம்ம ஹீரோயின்ஸ் அசத்துனதை தான் இப்போ நாம டிரெண்டா ஆக்கியிருக்கோம்.

பவ் ஸ்லீவ்
பவ் ஸ்லீவ் இது தான் இப்போ ஹாட் டிரெண்ட். ஹை பவ், லோ பவ்னு நிறைய வெரைட்டி இருக்கு. கோவை சரளா பாஷைல சொல்லணும்னா, 'இது என்ன?'... 'பேஷன்'. இதோட ஆரம்பப்புள்ளி நம்ம 70'ஸ் ஹீரோயின்ஸ். எல்லாருடைய பிளவுஸ்லயும் ஃபவ் இருந்துருக்கு... உடனே கூகுள் பண்ணாம உங்க அம்மாவோட பழைய போட்டோஸ், வாட்ரோப் செக் பண்ணுங்க பாஸ்!

ஓவர் கோட்
'ஸ்லீவ் செட் ஆகல'னு தொடங்கி கொஞ்சம் ஃப்ன்கி லுக் வேணும், பேக் போஸ் வெளிய தெரியாம இருக்கணும்னு பல காரணங்கள் வரைக்கும் இப்போ பல கேர்ஸ்ஸோட ஃபேஷன் டிப்ஸ் ஓவர் லே யூஸ் பண்றது. அதாவது டிரெஸ்க்கு மேல ஒரு கோட் பயன்படுத்துறது. ஆண்கள் மட்டுமே கோட் போட்டு வந்த காலத்திலேயே கிராப் டாப்க்கு கோட் போட்டு மாஸ் பண்ணிருக்காங்க நடிகை ஶ்ரீதேவி ...நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா.

க்ளோஸ் நெக்
போல்ட் லுக், கிளாசிக் லுக் வேணும்னு நினைக்கிற பெண்களோட சாய்ஸ் 'க்ளோஸ் நெக்'. இது 70'ஸ்ல இருந்து அப்படியே ரீ-கிரியேட் பண்ண பேட்டர்ன. இப்போ ஃபிரஷ் ஸ்டைலா மாறியிருக்கு. க்ளோஸ் நெக் மட்டுமில்ல வீ நெக், டீப் நெக் எல்லாம் அந்தக் காலத்து கண்டுபிடிப்புகள் தான்.

லெக்கின்ஸ்
இந்த காலத்து பெண்களோட வாட்ரோப்ல தவிர்க்க முடியாத இடம் லெக்கின்ஸ்க்கு உண்டு. ஒரு லெக்கின்ஸ் இருந்தா போது பத்து டாப்ஸ்களுக்கு மேட்ச் பண்ணிருவாங்க. இதுவும் பழசு தான் மக்களே... பல பழைய படங்களில் பார்க்கலாம்.!
ஸ்லீவ் லஸ்
அந்தக் காலத்து படங்கள்ல பணக்கார வீட்டு பெண்களுக்கான அடையாளமா ஸ்லீவ் லஸ் டிரஸ் இருந்திருக்கு. நடிகை சாவித்ரி தொடங்கி பத்மினி வரை எல்லாரும் ஃபாலோ பண்ண டிரெண்டை தான் இப்போ நாம ரீ-கிரியேட் பண்ணிட்டு இருக்கோம்.
இதெல்லாம் சரி இதை தெரிஞ்சு நாங்க என்ன பண்றது ஒரு எண்ணம் உங்க மனசுக்குள்ள வந்துருக்கலாம். இப்போ ரீ-கிரியேட்னு ஒரு கான்செப்ட் டிரெண்ட்ல இருக்கு.
நடிகை கீர்த்தி சுரேஷ் கூட அவங்க அம்மாவோட சாரீஸை கட்டி போட்டோஷூட் பண்ணிருந்தாங்க.
இப்படி அந்த காலத்து டிரஸ், இந்தக் காலத்து டிரெண்ட்னு எடுத்தோம்னா லிஸ்ட் நீண்...டுக்கிட்டேப் போகும்.

இந்தக் கட்டுரைல சில பேரை பத்தி குறிப்பிட்டிருக்கோம்னா இவங்க தான் அந்த டிரெண்டா உருவாக்குனாங்கனு சொல்லல. அந்தக் காலத்துலேயே இந்த டிரெண்ட் இருக்கு. இவங்களை உதாரணமா சொல்றொம்.
ஆனா, நம்ம இப்போ எதோ புதுசா வந்துருக்குனு நாம நினைச்சுகிட்டு இருக்கோம். கொஞ்சம் ஆழமா தேடி பார்த்தா... இந்த மாதிரி நிறைய விஷயங்கள் தெரிய வரும்.
இப்போ நம்ம எப்படி வெஸ்டர்ன் ஸ்டைல்ல இன்ப்ளூயன்ஸ் ஆகி நமக்கான டிரெண்டா உருவாக்கறோம்னா, அதே மாதிரி தான் அந்தக் காலத்துலயும் இருந்திருக்கு.
ஆனா, என்ன 'வாழ்க்கை ஒரு வட்டம்'ங்கற மாதிரி ஒரே பேட்டர்னை காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி ஸ்டைல் பண்ணிக்கிறோம். அவ்ளோ தான்.
இதுப்பத்தி ஸ்டைலிஷ்ட் அர்ச்சனா கிட்ட பேசினோம்...
"வேகமா மாறிகிட்டு இருக்க பேஷன் உலகத்துல ஒண்ணு மட்டும் மாறவே மாறாது. அது என்னன்ன... பழைய ஃபேஷன்கள் தான் திரும்ப திரும்ப கொஞ்சம் மாறி மாறி புதுசா வந்துகிட்டு இருக்கும்.
நம்ம இன்னைக்கு ஸ்டைல்னு நினைச்சு போடற ஒரு விஷயம். பல வருசங்களுக்கு முன்னாடி, எப்பவோ ஒருத்தங்க போட்ருப்பாங்க.
ஒரு டிரெண்ட் உருவாகும், பிரபலமாகும், காணாம போகும், திரும்ப வரும்... ரிப்பீட்டு இது தான் காலம் காலமா ஃபேஷன் உலகத்துல நடந்துட்டு வருது.
உதாரணத்துக்கு சொல்லணும்னா 'பட்டு சேலைகள்'. நம்ம பாட்டி, அம்மா விரும்பி கட்டிகிட்டு இருந்த பட்டு சேலைகளை, இப்போ ஜென் Z-க்கள் விரும்பி வாங்கி கட்டுறாங்க.

1960-கள்ல பிரபலமான கேதரிங் பேன்ட், திரும்பவும் 2010-கள்ல வந்துச்சு. 80-கள்ல பேமஸ்ஸா இருந்த பெல் பாட்டம்ஸை, இப்போ நம்ம யூத்துகள் ஷார்ட் டாப்ஸ், மாடர்ன் ஆக்சரிசஸ்கள் போட்டு மறுபடியும் டிரெண்ட் ஆகுறாங்க.
உலகம் முழுவதும் இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்ச்சி காரணமாக, 1920-கள்ல கிரே கலர் தான் பெரும்பாலும் பயன்படுத்துனாங்க. கிரே கலர் ரொம்ப போர் அடிக்க மத்த கலர்களுக்கு மாறுனாங்க.
2000 தொடக்கத்துல வின்டேஜ் பேஸ்டல்ஸ், நியான் வந்துச்சு. 2010-ல எர்த்தி (Earthy) டோன் எட்டி பார்த்துச்சு.
அப்புறம், மறுபடியும் 2018-ல சாப்ட் பேஸ்டல்ஸ் பிரபலமாச்சு. இப்போ, லைட் கலர்களை அதிகம் விரும்புறோம்.
அதனால, பேஷன்ங்கறது எப்பவும் புதுசு அல்ல. கிளாசிக் விஷயத்தை மாடர்ன் ட்விஸ்ட்டோட கொண்டு வர விஷயம் தான் பேஷன்".
ஆக மொத்தம், பழசு தான் புதுசு மக்களே!