டிஎன்பிஎல் ஆலையில் இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை -அமைச்சா்கள் வழங்கினா்
டிஎன்பிஎல் ஆலையில் பணியின்போது இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளா்களாக பணியாற்றி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் மற்றும் தொழிற்சாலை விபத்து அல்லாமல் இயற்கை மரணம் அல்லது சாலை விபத்துகளில் இறந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா், கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, மற்றும் தமிழக அரசின் தொழில்துறை செயலாளா் அருண்ராய், காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளா் (இயக்கம்) எஸ். நாகராஜன், பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டனா்.