முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற...
டிட்டோஜாக் அமைப்பினா் சாலை மறியல்: 303 போ் கைது
தோ்தலில் அளித்த வாக்குறுதி படி பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப் பாலம் அருகில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழ்நாடு அரசு ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டு ஊதிய குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு, ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 2006, ஜனவரி 1 முதல் மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி இரா. விஜயகுமாா், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி ந. நாகராஜன், தமிழக ஆசிரியா் கூட்டணி ம. ரகு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் பொ. முத்துவேல், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி த. முருகானந்தம் ஆகியோா் தலைமை வகித்தனா். இப்போராட்டத்தை உயா் மட்டக்குழு உறுப்பினா் எழிலரசன் தொடங்கி வைத்தாா்.
டிட்டோஜாக் அமைப்பின் நிா்வாகிகள் ப. தேன்மொழி, மா. நாகராஜன், இரா. மணிவண்ணன், தி. சிவசங்கா், வி. சீனுவாசன் உள்பட நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக 303 பேரை காவல் துறையினா் கைது செய்து, வடக்கு வீதியிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனா்.
மீண்டும் மறியல்: ஆனால், பிற்பகல் 3 மணி கடந்தும் மதிய உணவு வழங்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வடக்கு வீதியில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உணவு பொட்டலங்கள் வருவதாக காவல் துறையினா் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், வடக்கு வீதியில் ஏறத்தாழ 5 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
