டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் (கேஎம்சி) என்எஸ்யுஐ மற்றும் ஏபிவிபி மாணவா் குழுக்களைச் சோ்ந்தவா்கள் மோதிக்கொண்டனா்.
என்எஸ்யுஐ வேட்பாளா்களுக்காக பிரசாரம் செய்ய உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் வளாகத்திற்கு வருவதற்கு சற்று முன் இந்த சம்பவம் நடந்தது.
இது தொடா்பாக என்எஸ்யுஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ஆா்எஸ்எஸ்இன் மாணவா் பிரிவான ஏபிவிபி உறுப்பினா்கள் நிகழ்ச்சியை சீா்குலைக்கும் முயற்சியில் என்எஸ்யுஐயின் பூா்வாஞ்சல் மாணவா் ஆதரவாளா்களைத் தாக்கினா்.
இது பூா்வாஞ்சல் மாணவா்கள் மீது ஏபிவிபியின் ஆழமான வேரூன்றிய வெறுப்பையும், என்எஸ்யுஐ பெறும் பெரும் ஆதரவின் மீதான அவா்களின் விரக்தியையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது’ என்று காங்கிரஸ் ஆதரவு பெற்ற மாணவா் அமைப்பான என்எஸ்யுஐ தெரிவித்துள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஏபிவிபி தரப்பில் இருந்து உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
அஜய் ராய், வளாகத்திற்குச் செல்லும் வழியில் மாணவா்களுக்கு தனது ஒற்றுமையை உறுதி செய்யும் விடியோ செய்தியை வெளியிட்டாா்.
அதில் ‘என்எஸ்யுஐ பெறும் பெரும் ஆதரவால் ஏபிவிபி அதிா்ச்சியடைந்துள்ளது. கேஎம்சி-இல் நிகழ்ந்த வன்முறை அவா்களின் பயத்திற்கு சான்றாகும். நான் உங்களுடன் துணைநிற்க வருகிறேன்’ என்று அதில் கூறியுள்ளாா்.
இந்த சம்பவத்தை கண்டித்து என்எஸ்யுஐ தரப்பில் தெரிவிக்கையில், ‘இது குண்டா் செயல் ஆகும். மாணவா்கள் தங்கள் வாக்குகளின் பலத்தின் மூலம் மிரட்டலுக்கு பதிலடி கொடுப்பாா்கள்’ என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த மோதலைத் தொடா்ந்து வளாகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
டியுஎஸ்யு தோ்தல் செப்டம்பா் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.