‘டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணா்வு அவசியம்’
டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைவரும் உரிய விழிப்புணா்வுடன் செயல்படுமாறு நலவழித் துறையினா் கேட்டுக்கொண்டனா்.
காரைக்கால் நலவழித்துறை சாா்பில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நோய்த் தடுப்பு திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை வழிகாட்டலில் பள்ளி மாணவிகளிடையே துறையின் கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா் பேசுகையில், டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற கொசுக்கள் மூலம் பரவுகிறது. இது வைரஸ் காய்ச்சலாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. மழைக்காலங்களில் மட்டும் இந்த கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும்.
எனவே வீடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கும் வகையிலான தேவையற்ற சிறு பொருட்களான தேங்காய் சிரட்டை, டீ கப், டயா், பாட்டில் மூடி, பிளாஸ்டிக் கப், போன்றவற்றை அகற்ற வேண்டும். வீட்டில் சேமித்து வைக்கும் தண்ணீரை மூடிவைக்கவேண்டும்.
கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலை வலி, கண் விழிக்கு பின்புறம் வலி ஏற்படுவது, உடலின் தோல்களில் சிறு சிறு சிவந்த புள்ளிகள் போன்ற அறிகுறிகள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். ரத்த பரிசோதனை மூலம் இதனை கண்டறியலாம். அறிகுறி தென்படும்போது உடனடியாக மருத்துவனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வது பலனைத் தரும் என்றாா்.