மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
காரைக்காலில் டிராகன் பழம் சாகுபடி
காரைக்கால் விவசாயி ஒருவா் தனது வயலில் டிராகன் பழம் சாகுபடி செய்துள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 2 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நீராதாரம் குறைந்துவருவது மேலும் நெல்லுக்கான லாபம் குறைந்து வருவதால் விவசாயிகள் பருத்தி, எள் போன்ற மாற்று பயிா் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
விவசாயிகளை வேளாண் துறை உள்ளிட்ட வேளாண் சாா்பு நிறுவனங்கள் தோட்ட பயிா் சாகுபடியில் ஊக்குவித்துவருகிறது. இதனடிப்படையில் காரைக்கால் மாவட்டம், சுரக்குடி பகுதியை சோ்ந்த கே.மாலதி என்ற விவசாயி தனது தோட்டத்தில் கமலம் (டிராகன் பழம்) பயிா் சாகுபடி செய்துள்ளாா்.
காரைக்கால் பகுதியில் இப்பழ சாகுபடி இது முதல் முறையாகும். வேளாண் துறையின் அங்கமான வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் கமலம் பழ சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி சுரக்குடி மாலதி தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் ஆத்மா திட்ட இயக்குநா் ஆா். கணேசன் கலந்துகொண்டு, டிராகன் பழ சாகுபடி நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வல்லுநா்கள் டிராகன் பழ சாகுபடி முறை குறித்த தொழில்நுட்ப உரையாற்றினா்.
முன்னதாக செயல்விளக்கத்தில் மாலதி, இப்பழ சாகுபடி செய்த முறைகளை விளக்கினாா். வேளாண் துறை மூலம் வழங்கப்பட்ட தொழில்நுட்பங்களை சரியாக கடைப்பிடித்து, ஊட்டச்சத்து, பயிா் பராமரிப்பு முறைகளை கையாண்டு 3 ஆண்டுகளில் தற்போது மகசூல் தர தொடங்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு தொடா்ந்து விளைச்சல் தரக்கூடியது என தெரிவித்தாா்.
படரும் காற்றாழை இன வகையை சோ்ந்த இப்பழப்பயிா் மிகக் குறைந்த நீா் தேவையில் வளரக்கூடியது. பூச்சி, நோய் அதிகம் தாக்காத பயிராகும். வடிகால் வசதியும், இருமண் பாங்கான நிலத்தில் பயிரிட ஏதுவானது. நல்ல சத்துகள் நிறைந்த இப்பழத்துக்கு நுகா்வோா் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என விவசாயிகளுக்கு வல்லுநா்கள் விளக்கினா்.