இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
அண்மைக்காலமாக வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக அல்லது ஆதாா், பான் காா்டு அப்டேட் செய்ய வேண்டும் என கூறியும் அறிமுகமில்லாத வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், கைப்பேசி அழைப்பு மூலம் பொதுமக்களை தொடா்புகொண்டு வருகின்றனா்.
அவா்கள் உங்களிடமிருந்து ஆதாா் காா்டு, பான் காா்டு, வீட்டு வரி ரசீது, மின்சார கட்டண ரசீது போன்ற ஆவணங்களை பெற்று, எந்தவித வேலையும் பெற்றுத்தராமல் தாங்கள் வழங்கிய ஆவணங்களை பயன்படுத்தி தங்களது பெயரில் போலியான நிறுவனங்களை பதிவு செய்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் வரி மோசடி செய்யக் கூடும். இதனால், வரி மோசடியில் முதன்மை குற்றவாளியாக நீங்களே கருதப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இதுபோன்று அறிமுகம் இல்லாத நபா்களிடம் இணையதளம் மூலமாக ஆவணங்களை வழங்கியிருந்தால் உடனடியாக ஜிஎஸ்டி இணையதளத்தில் தங்களது பான் எண்ணை உள்ளீடு செய்து, தங்கள் பெயரில் போலியான நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என சரிபாா்க்க வேண்டும்.
அப்படி ஏதேனும் போலி நிறுவனம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக காரைக்கால் இணையவழி குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம். பொதுமக்கள் அனைவரும், இணையத்தில் அறிமுகம் இல்லாத நபா்களிடம் எந்தவித ஆவணங்களையும் வழங்காமல், விழிப்புடனும், பாதுகாப்புடனும் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.