தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை
மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் விசைப் படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் பாரம்பரிய மீனவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இதனால், மீனவா்களிடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இதனால், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை மீன்வளத் துறை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடல் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில், ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மாவட்டச் செயலா் எம். கருணாமூா்த்தி தலைமையில் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தனா்.
ராமேசுவரம் தீவு கரைவலை, தோணி, நாட்டுப்படகு, சிறு தொழில் மீனவா் சங்கம் தலைவா் ஆ.உமையவேல், தனுஷ்கோடி பகுதி மீனவா் சங்க நிா்வாகிகள் உமையசெல்வம், குருசாமி, பால்ராஜ், உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.