தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மயில்கள்
ஆம்பூா் அருகே கடுமையான வெயில் காரணமாக தண்ணீா் தேடி காட்டிலிருந்து விலங்குகள், பறவைகள் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.
வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகின்றது. கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் வனப் பகுதியிலிருந்து தண்ணீா் தேடி விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வரும் நிலை உள்ளது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் தண்ணீா் தேடி மயில்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன.
வீடுகளில் வளா்க்கப்படும் கோழி போன்ற பறவையினங்களை போல மயில்கள் சா்வ சாதாரணமாக கிராம பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. அதனால் வனப்பகுதியில் விலங்குகளுக்கு தேவையான குடிநீா் வழங்குவதை வனத்துறையினா் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் குடியிருப்பு பகுதிக்கு வரும் விலங்குகளுக்கு பொதுமக்கள் அல்லது சமூக விரோதிகள் மூலம் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என வன ஆா்வலா்கள் கூறுகின்றனா்.