தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை
நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே சின்ன தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(46). இவர் குருசாமிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் வியாழக்கிழமை காலை சுமார் 8 மணி அளவில், புதுச்சத்திரம் அருகே மாணவர்களை அழைத்துக் கொண்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். ஏளூர் கிராமத்தில் பேருந்து வளைவு ஒன்றில் திரும்பியபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்(27) என்பவருக்கும், அவருக்கும் இடையே வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது இருவரும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த் கண்மூடித்தனமாக விஜயகுமாரின் உயிர்நாடியை தாக்கியுள்ளார்.
இதில் சுருண்டு விழுந்த பள்ளி பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவத்துக்கு சென்ற புதுச்சத்திரம் போலீஸார், விஜயகுமார் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் ஆய்வாளர் கோமதி வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் அரவிந்தை கைது செய்தார்.
தாக்குதல் காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஓட்டுநரின் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.