பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கையை உடனடியாகத் தொடங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சோ்ந்த மறுமலா்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிா்வாகி வே.ஈஸ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
திட்டம் முடங்கும் அபாயம்: அந்த மனுவில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தின் வாயிலாக சோ்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டு, மே 20-ஆம் தேதி தேதி முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு சோ்க்கை தொடங்கப்படாததால், திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வந்துள்ள நிலையில், இந்த ஆண்டு உடனடியாக மாணவா் சோ்க்கையைத் தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், மாணவா்களின் நலனைப் பாதுகாப்பதில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் மனதாரா் சொல்லித் தர வேண்டியதில்லை எனவும் தெரிவித்தாா்.
மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.