வோடஃபோன் - ஐடியா முடங்கும் அபாயம்! நிதி நெருக்கடியிலிருந்து மீள உச்சநீதிமன்றத்தில் மனு
வோடஃபோன் ஐடியா லிமிடட் (விஐ) தமது நிறுவன பங்குகள் மீதான மொத்த வருவாய் சுமையிலிருந்து விலக்களிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
தங்கள் நிறுவனத்துக்கு போதிய நிதியுதவி அல்லது வருவாய் ஆதரவு கிடைக்கவில்லையெனில் 2025-26 நிதியாண்டு காலத்துக்குப் பின் எந்தவொரு சேவையையும் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வோடஃபோன் ஐடியா லிமிடட் உச்சநீதிமன்றத்தில் மே 13-ஆம் தேதி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மார்ச் 2026க்குள் ரூ.18,000 கோடி தொகையை அரசுக்கு செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிதி நெருக்கடியிலிருந்து மீள முடியாததால் தங்களால் அந்த தொகையை செலுத்த முடியவில்லை. இதனைக் காரணம்காட்டி, வங்கிகள் எங்களுக்கு புதிதாக கடன் தர மறுக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால், சேவை முடங்கும் அபாய நிலைக்கு ஆளாகுவோம். இந்த நிலையில், தவணை செலுத்தும் முறையை மறு சீராய்வு செய்ய உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
கடனில் சிக்கியுள்ள வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் 33.1 சதவீதத்துக்கும் மேல் பங்குகளுடன் தனிப்பெரும் பங்குதாரராக மத்திய அரசு உள்ளது. வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் ஏல நிலுவைகள், ஒத்திவைக்கப்பட்ட ஏல நிலுவைகள் உள்ளிட்டவற்றை பங்குகளாக மாற்றியுள்ளது மத்திய அரசு. இருப்பினும் இன்னும் நிதி நெருக்கடியில் அந்நிறுவனம் சிக்கி தவிக்கிறது.
இவ்விவகாரத்தில், வோடஃபோன்-ஐடியா நிறுவனத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்க முடியாத சூழல் உருவானால், இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று இத்துறை சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான பயனர்கள் பாதிக்கப்படுவர் என்பதையும் சுட்டிக்காட்டும் அவர்கள், இது, தொலைத் தொடர்பு துறைக்கு ஆரோக்கியமான நகர்வாக அமையாதென்றும் தெரிவிக்கின்றனர்.