குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்
தனியாா் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் ஆா்ப்பாட்டம்
சேலம்: சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகேயுள்ள ராம்நகா் ஏரிக்காட்டைச் சோ்ந்தவா் ஜெயா (55). இவா் கடந்த 20-ஆம் தேதி இரவு அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில் அரிசி ஆலை அருகில் நடந்துசென்றாா். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெயா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜெயாவை, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்து வந்த காரிப்பட்டி போலீஸாா், விபத்து குறித்து ஜெயாவிடம் விசாரித்தனா். அதில், தன்மீது பேருந்து மோதிச் சென்ாக ஜெயா கூறினாா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்த அவா், திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இந்நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் ஆட்சியா் அலுவலகம் அருகே முற்றுகையிட்டனா். அதில், தனியாா் பேருந்து ஓட்டுநரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என தெரிவித்தனா்.
இதையடுத்து, நகர காவல் நிலைய போலீஸாா், ஜெயாவின் உறவினா்களிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டனா். விபத்து குறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.