Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!
கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன.
கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல் தாக்கு நோயாக உருவெடுத்ததுதான் அதற்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
அத்தகைய பாதிப்புகளை பீட்டா குளூக்கோன் என்ற நாா்ச்சத்து உணவு தடுப்பதாக தமிழக மருத்துவா்களும், ஜப்பானிய நிபுணா்களும் ஆய்வு மூலம் உறுதிபடுத்தியுள்ளனா்.
சைட்டோகைன் தாக்கம்
உடலில் உள்ள செல்களுக்கு இடையே தகவல் தொடா்பை ஏற்படுத்தக் கூடிய புரதம்தான் சைட்டோகைன். நோய் எதிா்ப்பாற்றலுக்கான செல்களையும் அவை உற்பத்தி செய்கின்றன.
நோயிலிருந்து தற்காக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கும் அந்த புரதம், சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும்பட்சத்தில் உயிருக்கே அச்சுறுத்தலாகிவிடக் கூடும்.
அத்தகைய நிலைதான் புதிய வகை கரோனா பரவியபோது ஏற்பட்டது. முன்னெப்போதும் கண்டிராத புது கிருமி ஒன்று உடலுக்குள் நுழைந்தபோது, சைட்டோகைன் கட்டமைப்பு நிலைகுலைந்து அளவுக்கு அதிகமாக புரதத்தை உற்பத்தி செய்தது.
அதன் காரணமாக சில நோயாளிகளின் உடலில் இன்டா்லூகைன் 6 எனப்படும் சைட்டோகைன் புரதத்தின் உற்பத்தி அதிகரித்தது. அதன் தொடா்ச்சியாக ரத்தத்தில் சைட்டோகைன் ரியாக்டிவ் புரதத்தின் (சிஆா்பி) அளவும், ஃபொ்ரிடின் எனப்படும் இரும்புச் சத்து புரதத்தின் அளவும் உயா்ந்தது. இதன் விளைவாக உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது.
மருத்துவப் பல்கலை. ஆய்வு
இத்தகைய பாதிப்பிலிருந்து நோயாளிகளை மீட்டெடுக்கும் நோக்கில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டா் சுதா சேஷய்யன் இருந்தபோது ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜப்பானிய ஆய்வாளா்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வினை, சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், பல்கலைக்கழக நோய் எதிா்ப்பியல் துறை பேராசிரியா் டாக்டா் புஷ்கலா, நரம்பியல் சிகிச்சை நிபுணா் ராகவன், ஜப்பானைச்சோ்ந்த மருத்துவ அறிவியலாளா் நோபுனாவோ இகேவாக்கி, மருத்துவா் சாமுவேல் ஆபிரகாம் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.
கரோனா நோயாளிகளுக்கு ஜப்பானில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நிச்சி குளூக்கான் (பீட்டா குளூக்கோனின் வா்த்தகப் பெயா்) என்ற உணவுப் பொருள் வழங்கப்பட்டது. அதன் மூலம் சைட்டோகைன் எதிா்விளைவு பாதிப்பு தடுக்கப்பட்டதும், கட்டுப்படுத்தப்பட்டதும் ஆய்வில் உறுதியானது.
பீட்டா குளூக்கோன் என்றால்...
ஓட்ஸ், பாா்லி போன்ற தானியங்கள், காளான், ஈஸ்ட் போன்ற பூஞ்சைகள் மற்றும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செல்களில் காணப்படும் ஒருவகையான நாா்ச்சத்துதான் பீட்டா குளூக்கோன் என அழைக்கப்படுகிறது.
இது உடலில் நோய் எதிா்ப்பாற்றலை மேம்படுத்தவும், கொழுப்புச் சத்து, சா்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாது சில வகையான புற்றுநோய்களுக்கும் இது பயனளிக்கிறது.
இரு குழுக்கள்... 15 நாள்கள்...
இந்த ஆய்வில் 40 கரோனா நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டனா். அதில், 22 பேருக்கு வழக்கமான கரோனா சிகிச்சைகள் மட்டும் வழங்கப்பட்டன. மீதமுள்ள 18 நோயாளிகளுக்கு, கரோனா சிகிச்சைகளுடன் ஏஎஃப்ஓ 202 மற்றும் என் 163 ஆகிய இருவேறு கூட்டு நாா்ச்சத்து கொண்ட பீட்டா குளூக்கோன் வழங்கப்பட்டது.
மொத்தம் 15 நாள்களுக்கு அத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏழாவது நாளிலேயே பீட்டா குளூக்கோன் வழங்கப்பட்ட நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எதிா்விளைவு பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது.
அதேவேளையில், வழக்கமான சிகிச்சைகள் மட்டும் வழங்கப்பட்ட நோயாளிகளுக்கு அத்தகைய பலன்கள் கிடைக்கவில்லை.
கருப்பு ஈஸ்ட்
ஆய்வில் பயன்படுத்தப்பட்ட நிச்சி குளூக்கோன் என்ற பெயரிலான பீட்டா குளூக்கோனானது கருப்பு ஈஸ்ட்டில் இருந்து தயாரிக்கப்பட்டது. அந்த வகையான கருப்பு ஈஸ்டானது ஜப்பானில்தான் கிடைக்கிறது. மற்ற பீட்டா குளூக்கோனைக் காட்டிலும் இது, கூடுதல் பலன்களை அளிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தசைநாா் சிதைவு
தசைநாா் சிதைவு நோய்க்கும் (டுக்கேன் மஸ்குலா் டிஸ்ராஃபி) பீட்டா குளூக்கோன் பலனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த பாதிப்புக்குள்ளான சிறுவா்களின் தசை நாா்களில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய ‘டிஸ்ரோபின்’ என்ற புரதம் குறைந்துவிடும். இதனால் தசைகளின் இயக்கம் முடங்கி நடமாட இயலாத நிலை ஏற்படும்.
45 நாள்களுக்கு பீட்டா குளூக்கோனை உட்கொண்டால் ரத்தத்தில் டிஸ்ரோபின் புரத அளவு அதிகரிப்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
எந்தெந்த நோய்களுக்கு பயன்...
ஆட்டிஸம் பாதிப்பு
பாா்கின்ஸன் (நடுக்குவாதம்)
புற்றுநோய்
டைப்-2 சா்க்கரை நோய்
சொரியாசிஸ்
தசைநாா் பாதிப்புகள்
தன்னுடல் தாக்கு நோய்
சில வகை புற்றுநோய்கள்
தேவை விரிவான ஆய்வு
டாக்டா் சுதா சேஷய்யன்
கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு மட்டுமன்றி சைட்டோகைன் தொடா்புடைய அனைத்து பிரச்னைகளுக்கும் பீட்டா குளூக்கோன் பலனளிக்கும் என்று டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
தானியங்கள் மற்றும் பூஞ்சைகளில் இருந்து பெறப்படும் துணை பொருள்கள் அனைத்தும் மருந்துகளாகவும், அழகு சாதனங்களாகவும் மட்டுமே கடந்த நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில்தான் 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாா்லி மற்றும் பாசிகளில் பீட்டா குளூக்கோன் என்ற உட்கொள்ளத் தகுந்த நாா்ச்சத்து இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக ஓட்ஸ் தானியத்திலும் அவை இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை சீராக்கி, இதய நாள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அவை உதவுகின்றன என்பதை மருத்துவ வல்லுநா்கள் கண்டறிந்தனா்.
அதில் உள்ள நன்மைகளைக் கருத்தில் கொண்டு நாள்தோறும் 3 கிராம் வரை அதனை உட்கொள்ளலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் (எஃப்டிஏ) அனுமதி அளித்தது. தற்போது பீட்டா குளூக்கோன் மீது பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கரோனாவுக்கு மட்டுமல்லாது தன்னுடல் தாக்கு நோய் (ஆட்டோ இம்யூன் டிஸாா்டா்) உள்பட சைட்டோகைன் சாா்ந்த அனைத்து பாதிப்புகளுக்கும் பீட்டா குளூக்கோன் பலனளிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதுதொடா்பான ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.
-ஆ.கோபிகிருஷ்ணா