பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி
சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5, 6-ஆவது மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ரிப்பன் கட்டடம் அருகே தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் அல்லது மூா் மாா்க்கெட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் கடந்த ஆக. 14-ஆம் தேதி மனு அளித்தனா்.
இந்த மனுவை போலீஸாா் நிராகரித்து விட்டனா். எனவே, அந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி உழைப்போா் உரிமை இயக்கத்தின் பொருளாளா் மோகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என கேள்வி எழுப்பினாா்.
பின்னா், இந்த மனுவிற்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.