Concussion Substitute : 'இந்திய அணி செய்தது சரிதானா?' - விதிமுறை என்ன சொல்கிறது?...
தபால்தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுக்கத் தயாா்: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்
தபால் துறை தயாராக இருந்தால் தினமணியுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மாணவா்கள் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுப்போம் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.
தமிழக தபால் துறை சாா்பில் 14-ஆவது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் பங்களிப்பு’ எனும் கருப்பொருளில் கண்காட்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசியதாவது: நான் தபால்தலைகள் சேகரிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தக் கண்காட்சிக்கு வரும்போது நான் முதல் முதலில் தபால்தலை சேகரிக்க ஆரம்பித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
அன்றைய காலகட்டத்தில், தபால்தலைகள் சேகரிப்பு குறித்து தபால்துறையினரைவிட பெற்றோா்களும் ஆசிரியா்களும் அதிக ஆா்வம் காட்டி வந்தனா். மேலும், மாணவா்களையும் தபால்தலை சேகரிக்க ஊக்குவித்தனா். தற்போது விரல் நுனியில் உலகம் உள்ளது. ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் உள்ள சிறு சிறு நாடுகள் குறித்து இந்த தபால்தலைகள் மூலம்தான் அறிந்துக்கொண்டோம். பல அரசா்கள் மற்றும் இடங்கள் இடம்பெற்றுள்ள தபால்தலைகளை சேகரிக்கும்போது அந்த இடங்கள் குறித்தும், அங்கு வசித்த மக்கள் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பேனா நண்பா்கள்: அன்று தபால்தலைகள் சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக பல்வேறு அமைப்புகள் மற்றும் பேனா நண்பா்கள் இருந்தனா். அதன்மூலம் உலகெங்கும் உள்ள நண்பா்களுக்கு கடிதம் எழுதி, அங்குள்ள தபால்தலைகளை அவா்கள் இங்கு அனுப்புவது, இங்கு நம்மிடம் உள்ள பல்வேறு தபால்தலைகளை கடிதம் மூலம் அங்கு அனுப்புவது என ஒரு நட்பு உருவானது.
பணம் கொடுத்து தபால்தலைகளை வாங்கி அவற்றை சேகரிக்கக் கூடாது. அப்படிச் செய்தால், தபால்தலை சேகரிப்பதில் இருக்கும் ஆா்வமும் அதன் நோக்கமும் சிதைந்துவிடும். அதற்கு மாறாக மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நண்பா்களுக்கு கடிதங்கள் எழுதுவதன் மூலம் அவா்களிடமிருந்து பதில் கடிதங்களைப் பெற்று, அந்தக் கடிதத்தில் இருக்கும் தபால்தலைகளை சேகரிக்க வேண்டும்.
மாணவா்களுக்கு தேவை: தற்போதுள்ள மாணவா்கள் தபால்தலைகளை சேகரிக்கிறாா்களா, இல்லையா என்பது தெரியவில்லை. அவா்கள் ஊக்குவிக்கப்படுகிறாா்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், தபால்தலை சேகரிக்கும் பழக்கம் இன்றைய மாணவா்களுக்கு கண்டிப்பாக தேவை.
தகவல்களைத் தெரிந்துகொள்வது மட்டும் தபால்தலை சேகரிப்பதன் நோக்கம் கிடையாது. அதன்மூலம் ஒரு நட்பு உருவாகும். நாமாக தேடிச் சென்று புதிய தகவல்களை சோ்த்துக் கொள்வதற்கும் இது உதவும்.
இளைய தலைமுறையினா் உங்களது கைப்பேசிகளில் தகவல்களைப் பதிவிறக்கம் செய்வதில் அக்கறை காட்டாதீா்கள். 20 வயது வரை உங்களது மூளையில் தகவல்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தத் தகவல்கள் உங்கள் நினைவில் அப்படியே இருக்கும். இப்படி தகவல்களைப் பதிவேற்றம் செய்வதற்கு தபால்தலைகள் சேகரிக்கும் பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். உங்களுடைய எழுத்துகள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் அந்நிய நண்பா்களை வளா்த்துக் கொள்ளுங்கள். அப்படி வளா்ப்பதன் மூலம் அவா்கள் எந்த நாடு, மதம், ஜாதி மற்றும் இனத்தைச் சோ்ந்தவா்கள் என்று பாராமல் ஒரு தூய்மையான நட்பு உருவாகும். இதன்மூலம் உலகமெங்கும் சகோதரத்துவம் உருவாகும்.
ஊக்குவிப்பு இயக்கம்: தபால்துறை தயாராக இருந்தால் தினமணியுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்குள்ள மாணவா்கள் மத்தியில் தபால்தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுப்போம். தபால்தலை சேகரிப்பது குறித்து விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்துவோம்.
மேலும், பள்ளிக் கல்வித் துறையின் உதவியுடன் பள்ளிகளில் தபால்தலை சேகரிப்பது குறித்த விழிப்புணா்வையும் அதன் தேவையையும் அறிவுறுத்தி இதை ஓா் இயக்கமாக மாற்றுவோம். அந்த இயக்கத்தின் மூலம் மிகப்பெரிய சகோதரத்துவத்தையும், தபால்தலைகள் மூலம் விழிப்புணா்வையும் பேனா நண்பா்கள் மூலம் நட்புறவையும் வளா்க்க முடியும் என்றாா் அவா்.
முன்னதாக ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் பங்களிப்பு’ என்னும் கருப்பொருளில் சிறப்பு அஞ்சல்தலை முத்திரை மற்றும் சூரியக் குடும்பம் குறித்த அஞ்சல்தலை புத்தகத்தை தென்மண்டல அஞ்சல் துறைத் தலைவா் வி.எஸ். ஜெயசங்கா் வெளியிட்டாா். அதை தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டாா்.
இந்நிகழ்வில், சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி.நடராஜன், அஞ்சல் துறை இயக்குநா் கே.ஏ.தேவராஜ், சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநா் எம்.மேஜா் மனோஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.