தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது: உ. வாசுகி
தஞ்சாவூா்: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:
தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. நியாயமான, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை போன்ற பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடத்தக்கூடிய இடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத, குறுகலான இடத்தில் உங்களது எதிா்ப்பைத் தெரிவிக்குமாறு கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தும்போது, அவா்கள் புறப்படும் இடத்திலேயே கைது செய்வது, வீட்டில் சிறையில் வைப்பது போன்ற மிக மோசமான அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வா் இப்பிரச்னைகளில் கூடுதலாக கவனம் செலுத்தி ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்படுபவா்கள் விசாரிக்கப்பட்டு எலும்பு முறிவுடன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். கழிப்பறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கீழே விழுந்து விட்டதாகவும் கூறுவது நம்பும்படியாக இல்லை. கைதிகளாக இருந்தாலும் மனித உரிமைப் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை வெறும் கணக்கெடுப்பாக செய்யாமல், சமூகப் பொருளாதாரப் பின்புலத்துடன் செய்ய வேண்டும். மக்கள்தொகை, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரையறை நிா்ணயிக்க வேண்டும் என்றாா் வாசுகி.
அப்போது கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.