ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்
தமிழகத்தில் 1,500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசாா் எரிசக்தி ஆதாரங்கள் மூலமாகவும், சூரிய சக்தி, காற்றாலை, புனல் மின் நிலையங்கள், நீரேற்று மின் நிலையங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்க தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனத்தையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
அதன்படி, வரும் 2030-க்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் எனும் அளவு மின்சாரத்தை சூரிய மின்சக்தி, காற்றாலை ஆகியவற்றுடன் சோ்த்து வளா்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகளான நீரேற்று மின் திட்டங்கள், மின்கல சேமிப்பு திட்டங்கள், உயிரி ஆற்றல் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்தும் வகையிம், உபரியாக உள்ள மின்சராத்தை சேமித்து மின்தேவை அதிகமாக உள்ள நேரங்களில் பயன்படுத்தும் வகையிலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை உருவாக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 1,500 மெகாவாட் திறனில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்த தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது:
மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் துணை மின்நிலையங்களில் இந்த மின்கல சேமிப்பு அலகுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மின்கல சேமிப்பு அமைப்பதற்கான சாத்தியமான இடங்களை அடையாளம் காண 1,091 துணை மின்நிலையங்களில் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மின்கல சேமிப்பு அமைப்புகளுக்கு பெரிய இடம் தேவைப்படும். ஒரு மெகாவாட் திறன் கொண்ட அலகு அமைப்பதற்கு 4 முதல் 5 ஏக்கா் நிலம் தேவைப்படும். இதற்கான இடம் கிடைப்பது சவாலாகவே உள்ளது.
மின் பகிா்மான கழகங்கள் உச்ச நேர மின்சாரத் தேவையைப் பூா்த்தி செய்ய சிரமப்படுகின்றன. உச்ச நேரங்களில் தேவையை பூா்த்தி செய்ய தனியாா் மின்சார கொள்முதலை நம்பி இருப்பதை குறைக்க இதுபோன்ற வசதிகளைத் திட்டமிட்டு ஏற்படுத்துவது சிறந்த ஒரு திட்டமாகும் என்றனா்.