செய்திகள் :

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபர்

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ப. செந்தில்குமார், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு.அருண் தம்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கிற கொள்கையின்படி தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேவை.

திருப்பூர், நாமக்கல், விருதுநகர் ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளில் கட்டமைப்பும் ஆசிரியர் பணியிடங்களும் இருக்கும் நிலையில் தலா 50 இடங்களை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள்தொகை அதிகரிப்பு, சுகாதாரத்தின் அவசியத்தின் அடிப்படையில் கூடுதலாக 50 (24 நகர்ப்புறம் 26 ஊரகம்) ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

சர்வதேச அளவில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. தமிழக முழுவதும் புற்றுநோய் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.447.94 கோடி நிதி உதவி கோரிக்கை வைக்கப்பட்டது. அத்துடன் தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்த ரூ. 603.45 கோடி நிதி உதவி கோரப்பட்டது.

கோவைக்கு எய்ம்ஸ்: நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் 2-ஆவது எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுகிறது. தமிழகம் சார்பில் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகள் பறிக்கப்படும் விவகாரங்கள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசினோம்.

"நீட்' தேர்வு விலக்கை வலியுறுத்தினோம். மருத்துவ பட்டப் படிப்புகளில் தேசிய மருத்துவ ஆணையம் மூலம் 100 சதவீதம் பொதுக் கலந்தாய்வு செய்து மாணவர்களை அனுமதிக்கும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதம் இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மூடப்படும் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை படிப்பைத் தொடரவைக்கும் பொறுப்பு மாநில அரசிடம் சுமத்தப்படுகிறது. இதற்கான விதிமுறைகளுக்கும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. இவை உள்ளிட்ட 11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தனது துறைச் செயலர், இணை செயலர்கள் ஆகியோருடன் இதுகுறித்து உடனுக்குடன் ஆலோசனை செய்தார்.

இந்தக் கோரிக்கைகளில் சிலவற்றுக்கு உடனடியாக ஒப்புதல் தரப்படும் என்றும், மற்றவை குறித்து முடிவெடுத்து அறிவிப்பதாகவும் அமைச்சர் நட்டா தெரிவித்தார்.

தேசிய சுகாதாரத் திட்டத்துக்கு (என்ஹெச்எம்) நிதி முறையாக வருகிறது. தற்போது, புற்றுநோய் நரம்பியல் மையங்களுக்கு ரூ.1,000 கோடியும், 6 மருத்துவக் கல்லூரிக்கு தலா ரூ.700 கோடி வீதம் ரூ. 4,200 கோடியும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கு மத்திய அரசு வழங்கும் பங்குக்கான நிதி உள்ளிட்டவை என மொத்தம் சுமார் ரூ. 8,000 கோடி வரை மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.

கோவை எய்ம்ஸýக்கான நிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக மாணிக்யா படத்தில் அறிமுகமான ரன்யா ராவ், தமிழில் விக்ர... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க