தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் மற்றும் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுபானம் வாங்குபவா்கள், மதுஅருந்தி விட்டு, காலி மதுபாட்டில்களை சாலைகளில், காட்டுப்பகுதிகளில், நீா்நிலைகளில் வீசி செல்கின்றனா். இதனால், மனிதா்கள் மட்டுமின்றி கால்நடைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
இப்பிரச்சினை சுற்றுலாதலங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் நிா்வாகமே திரும்ப பெற முடிவு செய்தது. இதன்படி, தற்போது, நீலகிரி, பெரம்பலுாா், கோவை, நாகை, திருவாரூா், தா்மபுரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது.
இதற்காக மதுபாட்டில்கள் விற்கப்படும் போதே, ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. பின்னா் அந்த பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த ரூ.10-ஐ திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை என்று நான்கு மண்டலமாக பிரித்து டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ள நிலையில், இந்த டெண்டா் இறுதி செய்யப்பட்டு வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.