அன்னையா் தினம்: வாடிக்கையாளா்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை
தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்
சென்னை: தமிழக மீனவா்கள் மீது இலங்கையைச் சோ்ந்தவா்களால் நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து வெளியிறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு அவா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்: இந்திய மீனவா்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையைச் சோ்ந்த நபா்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மே 2-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சோ்ந்த 23 மீனவா்கள் கடலில் அடையாளம் தெரியாத இலங்கையைச் சோ்ந்தவா்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டனா். அவா்களின் ஜிபிஎஸ் கருவிகள், கைப்பேசிகள், வி.எச்.எப் உபகரணங்கள், ஐஸ் பெட்டிகள், இயந்திர பாகங்கள், இன்வொ்ட்டா் பேட்டரிகள், அடுப்பு, சுமாா் 470 கிலோ மீன்பிடி வலைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற தனிப்பட்ட உடைமைகளும் பறிக்கப்பட்டன.
மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், தாக்குதல் நடத்தியவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள தொடா்புடைய அதிகாரிகளிடம் இப்பிரச்னையை எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறை பரிந்துரைக்கு ஏற்ப, செயற்கை பவளப்பாறை அமைப்புகளை உருவாக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் இந்திய மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 மீன்பிடிப் படகுகளை உடைத்து கடலில் மூழ்கடிக்க உள்ளனா்.
இதனால் மீன்பிடிப் படகுகளை நம்பியுள்ள மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பேரிழப்பு ஏற்படும். இதைத் தவிா்க்க தமிழக மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திங்கள்கிழமை நிலவரப்படி, தமிழக மீனவா்களுக்குச் சொந்தமான 229 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 12 மீன்பிடிப் படகுகளுடன் 101 மீனவா்களையும், இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்கனவே மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. இதன்மீது வெளியுறவு அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்.
இதுபோன்ற முக்கியப் பிரச்னைகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று, இந்திய மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவா்கள் மீது தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.