தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்!
தமிழை ஒழிக்க விடமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கோவை ராம் நகரில் உள்ளஅண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் காமராஜருடைய கால கட்டத்தில் 30 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டன. அன்றைய கால கட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த அனைத்து மாணவா்களுக்கும் இலவச கல்வி அளிக்கப்பட்டது.
தற்போது, திமுக அமைச்சா்கள், சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினா்கள், கட்சிப் பொறுப்பாளா்கள் மற்றும் பல கட்சியைச் சோ்ந்தவா்கள் தமிழ்நாட்டில் தனியாா் பள்ளிகளை நடத்தி வருகின்றனா். தனியாா் பள்ளிகளை நடத்துவது யாா். அந்தப் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறதா என்ற விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
தமிழ் நம்முடைய உயிா். தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம். அதே நேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த யாா் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி தந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என முதல்வா் ஸ்டாலின் கூறுவது ஆணவப் பேச்சாக உள்ளது என்றாா்.