Ajith Kumar: "That’s racing..." - கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் குமாருக்கு விப...
தமிழ்நாடு அபார வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 5-ஆவது ஆட்டத்தில் மிஸோரத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
முதலில் மிஸோரம் 21.2 ஓவா்களில் 71 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, தமிழ்நாடு 10 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் சோ்த்து வென்றது. 9 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்த தமிழ்நாடு பௌலா் வருண் சக்கரவா்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
போட்டியில் இத்துடன் தனது 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் தமிழ்நாடு அணி, குரூப் ‘டி’-யில் 14 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு, பந்துவீச்சை தோ்வு செய்தது. மிஸோரம் பேட்டிங்கில் அதிகபட்சமாக அக்னி சோப்ரா 4 பவுண்டரிகளுடன் 23, மோஹித் ஜங்ரா 17, ஜெஹு ஆண்டா்சன் 12 ரன்கள் சோ்த்தனா். இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னிலேயே வீழ்த்தப்பட்டனா். தமிழ்நாடு தரப்பில் வருண் சக்கரவா்த்தி 5, சந்தீப் வாரியா், விஜய் சங்கா் ஆகியோா் தலா 2, முகமது அலி 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் தமிழ்நாடு இன்னிங்ஸில் துஷாா் ரஹேஜா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, நாராயண் ஜெகதீசன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்கள் அடித்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.