தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்
`தமிழ்நாடு இரண்டாந்தர மாநிலமாக போகக்கூடாது; ஒரே குடையின்கீழ் ஒன்றிணைவதே நம் இலக்கு’ - துரைமுருகன்
வேலூரில் இன்று, தி.மு.க பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
துரைமுருகன் பேசும்போது, `` `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய சித்தாந்தத்தை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். இந்த தலைப்பு பல்வேறு கோணங்களை உள்ளடக்கியிருக்கிறது. பிரிந்திருக்கின்ற அல்லது ஒத்தக் கருத்துடைய அல்லது நம்பால் விருப்பம்கொண்ட யார் யார் இருக்கிறார்ளோ? அவர்களையெல்லாம் சந்தித்து நம்முடைய கொள்கை விளக்கங்களை தெரிவித்து, அவர்களை இந்த அணியில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த தலைப்புக்கான தத்துவத்தின் முதல் பாகம்.

ஏதோ ஒருநாள் செய்துவிட்டு முடிந்தது, `நான் நாலுப் பேரைக் கேட்டேன். மூணு பேர் வரேன்னாங்க. ஒருத்தர் மட்டும் வரலைனு சொன்னார்’ என்று எழுதிவிட முடியாது. இந்த தத்துவத்தில் ஒரு மாதக் காலத்துக்குமேலாக எல்லா இடங்களுக்கும் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், நகரக் கழகச் செயலாளர்கள், பல்வேறு பொறுப்பில் இருப்பவர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஏன் பொதுச் செயலாளர் ஆகிய நானும்கூட பல இடங்களில் கலந்துக்கொண்டு தலைவரின் ஆணையை ஏற்று பணியை செய்வோம்.
முதலில் மற்றவர்களை நம் கட்சியில் ஈர்க்கிறபொழுது, அவர்களுக்கு வெறும் தி.மு.க-வின் கோட்பாடுகளை சொன்னால் மட்டும் எடுபடாது. திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல. அது ஒரு சமுதாய போராளிக் கட்சி. தமிழ்நாட்டினுடைய இனம், மானம், மொழி, மரியாதை இவைகளையெல்லாம் கட்டிக்காக்கின்ற ஒருக் கட்சி.
`தமிழ்நாடு யாருக்கும் இரண்டாந்தர மாநிலமாக போகக்கூடாது’ என்பதில் அதிக அக்கறையுள்ள கட்சி. ஆகையினால், மற்றவர்களைச் சந்திக்கின்றபொழுது `மொழி, மானம் காக்கிற பணியை நாங்கள் செய்கிறோம்’ என்று எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தளபதியின் கருத்திலே ஒன்று.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திலும் பிரசாரங்கள் இன்றைக்கு மாறிப்போயிருக்கிறது. கொஞ்ச காலத்துக்கு முன்னால், ஒருப் பொதுக்கூட்டம் என்று சொன்னால், ஆண், பெண்கள் அடுக்கடுக்காக வந்து உட்கார்ந்து ஒரு பெரும்கூட்டத்தை மூன்று மணி நேரம் ரசிப்பார்கள். ஆனால், இன்றைக்கு அந்த மாதிரி டிரெண்ட் கிடையாது. `எதையும் டி.வி-யில் பார்த்துவிட்டு போய்விடலாம்’ என்கிற நிலை இருக்கிறது.

எனவே, நேரடியாகவே அந்தக் குடும்பங்களைச் சந்தித்து இந்த ஆட்சியின் நிலைமை மற்றும் இந்த 4 ஆண்டு காலத்தில் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை எடுத்துச்சொல்லியும், எங்களுடைய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அல்லது வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளையெல்லாம் மாற்றுக் கட்சிகள் ஆதரிக்கிறது. மத்திய சர்க்கார் மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதியை தரமறுப்பதோடு, அதற்கு எதிர்வினையையும் செய்கிறது என்பதையும் மக்களிடத்தில் தனித்தனியாக நின்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினரையும் `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பது தான் நம்முடைய முக்கிய இலக்கு’’ என்றார் அமைச்சர் துரைமுருகன்.