நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 780 ஆக அதிகரிப்பு: ஜே.பி. நட்டா
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜூலை 10-ல் கட்டுரை, பேச்சுப் போட்டி
தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்ட நாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ்வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ கூறியதாவது: தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதி, ‘தமிழ்நாடு நாளாக‘ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதன்படி அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கான போட்டிகள் வருகிற 10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு எம்எஸ்பி சோலை நாடாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. ஆட்சிமொழி வரலாற்றில்
கீ.ராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி என்ற தலைப்புகளிலும் பேச்சுப் போட்டியும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகிழ்வு, ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடத்தப்படும்.
பங்கேற்க விரும்பும் மாணவா்கள், அவா்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் பரிந்துரைக்கப்படும் மாணவா்கள் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்த போட்டிகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451 - 2461585 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.