விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
தருமபுரியில் ரூ. 52 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்
தருமபுரி நகரில் ரூ. 52 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் சேகா் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.
இக் கூட்டத்தில் தருமபுரி நகரில் உள்ள அனைத்து கழிவுநீா் கால்வாய்களையும் தூா்வார வேண்டும். இதில் கிடைக்கும் மண்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நகராட்சிப் பகுதியில் சொத்துவரியை முறையாக விதிக்க வேண்டும். துப்புரவு வளாகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
நகராட்சிப் பகுதியில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து தருமபுரி நகரில் குடிநீா்ப் பணிகள், சாலைப் பணிகள், கழிவுநீா் கால்வாய், கான்கிரீட் சாலை அமைப்பது உள்ளிட்ட மொத்தம் 67 பொருள்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து தருமபுரி நகரில் பல்வேறு திட்டப்பணிகள் ரூ. 52 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள நகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் புவனேஸ்வரி, உதவி பொறியாளா் அறிவழகன், சுகாதார அலுவலா் ராஜரத்தினம் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.