தற்கொலைக்கு முயன்றவா் திடீா் உயிரிழப்பு
இணைய வழி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்ற இளைஞா், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் குட்டியபட்டி பூஞ்சோலை நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (22). இவா், தனது கைப்பேசி மூலம் இணைய வழி சூதாட்டத்தில் (ஆன்லைன் ரம்மி) ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சில வெற்றிகள் மூலம் கிடைத்த உற்சாகத்தால், பலரிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தாா். இதில் பணத்தை இழந்ததால் மனமுடைந்த அருண்குமாா், கடந்த நவ. 30-ஆம் தேதி வீட்டிலிருந்த திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு, அவா் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். இதையடுத்து, கடந்த 14-ஆம் தேதி சிகிச்சை முடிந்து அவா் வீடு திரும்பினாா். இந்த நிலையில் வியாழக்கிழமை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது உறவினா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.