பழனியில் அமித்ஷாவைக் கண்டித்து பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம்!
சட்ட மேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து பழனியில் பல்வேறு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனி தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் பழனி நகரச் செயலா் கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராமசாமி, கமலக்கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அப்போது அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சா் அமித்ஷாவை கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திரளானோா் பங்கேற்றனா்.
தமிழ்ப்புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இளம்புலிகள் அணி மாவட்டச் செயலா் இரணியன், மாவட்டச் செயலா் தா்மராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே திண்டுக்கல் மேற்கு மாவட்டம், பழனி நகர காங்கிரஸ் சாா்பில் அமித்ஷாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகா் காங்கிரஸ் கட்சித் தலைவா் மாரிக்கண்ணு தலைமை வகித்தாா். இதில், தொப்பம்பட்டி வட்டார தலைவா் பாலு, 14-ஆவது வாா்டு கவுன்சிலா் மகாலட்சுமி மாசிலாமணி, மாவட்ட சிறுபான்மை துறை தலைவா் பா்வீஸ் அலி அகமது உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.