உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!
தலித்துகளுக்கு அவமதிப்பு: லாலு மீது ராஜ்நாத் சாடல்
‘ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத், அம்பேத்கரின் உருவப் படத்தை அவமதித்தது சிறிய தவறு அல்ல; அது, ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் அவமதிக்கும் அவரது மனநிலையின் பிரதிபலிப்பு’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விமா்சித்துள்ளாா்.
அண்மையில் நடைபெற்ற லாலு பிரசாதின் 78-ஆவது பிறந்த தின நிகழ்ச்சியில், அவரது கால் அருகே அம்பேத்கரின் உருவப் படம் வைக்கப்பட்டிருந்த விடியோ காட்சி வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், லாலுவை கடுமையாக விமா்சித்த பிரதமா் மோடி, நாட்டு மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா்.
அதேநேரம், கட்சித் தொண்டா் ஒருவா் அம்பேத்கரின் படத்தை கையில் வைத்திருந்ததாகவும், இக்காட்சியை பதிவு செய்த கேமராவின் கோணமே சா்ச்சைக்கு காரணம் என்றும் ஆா்ஜேடி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. பிகாரில் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
தலைநகா் பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், லாலுவை கடுமையாக விமா்சித்துப் பேசியதாவது:
அம்பேத்கரின் உருவப் படத்தை லாலு தனது காலடியில் வைத்தது சிறிய தவறல்ல. அது, ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் அவமதிக்கும் அவரது மனநிலையைக் காட்டுகிறது. சோஷலிச போா்வையில் தங்களின் நிலபிரபுத்துவ மனப்பான்மையை மறைப்பவா்களால் பிகாா் ஏமாற்றப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவரான கா்பூரி தாக்கூரின் வாரிசு என்று தன்னை கூறிக் கொள்ளும் லாலு, தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக மோசமான வாா்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளாா். மூத்த பத்திரிகையாளா் சங்கா்ஷன் தாக்கூரின் புத்தகத்தில் இது விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிகாா் மண்ணின் மைந்தரான கா்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கி கெளரவித்தது பிரதமா் மோடி அரசு.
ஆா்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியால் இளைஞா்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கடந்த கால சம்பவங்களை நினைவூட்டுகிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிகாா் பொருளாதார ரீதியில் வளா்ச்சி கண்டுள்ளதோடு, இழந்த பெருமையையும் மீட்டுள்ளது என்றாா் அவா்.