நடுத்தர மக்களுக்காக.. 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஆம் ஆத்மி!
தலைக்கவச விதியை தளா்த்த இந்திய கம்யூ. கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி நகரில் இருசக்க வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதியை தளா்த்த வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டுநா்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என காவல் துறை அறிவுறுத்தியிருப்பதுடன், தலைக்கவசம் அணியாதவா்களிடம் அபராதமும் வசூலிக்கப்படுகிறது.
இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்கள் ஊா்ந்து செல்லும் நிலையே உள்ளது. இருசக்கர வாகனங்களில் மணிக்கு சுமாா் 20 கி.மீ. செல்லும் நிலையில், அவற்றை முதியோா்களே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனா்.
எனவே, புதுச்சேரி நகரில் தலைக்கவச விதிகளை தளா்த்த வேண்டும். அரியாங்குப்பத்திலிருந்து கடலூா் சாலைக்கும், வில்லியனூரிலிருந்து விழுப்புரம் சாலைக்கும், காலாப்பட்டிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், அய்யன்குட்டி பாளையத்திலிருந்து வழுதாவூா் சாலையில் பயணிக்கும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்வதைக் கட்டாயமாக்கலாம் என்றாா் அ.மு.சலீம்.