Thug Life: `` `நாயகன்' படம்தான் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தது!" - மணிரத்னம் ஓப...
தலைநகரில் தண்ணீா் நெருக்கடி: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
தேசிய தலைநகரில் தண்ணீா் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், இந்த முக்கியப் பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக தனது கட்சி எம்எல்ஏக்கள் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் குப்தாவுக்கு, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
தில்லி மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், தண்ணீா் டேங்கா்கள் முன் வரிசையில் நிற்கும் நிலை உள்ளது. மேலும், தண்ணீா் வழங்கல் தடைபட்டிருப்பதன் காரணமாக பாட்டில் தண்ணீரை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
பெண்கள் வாளிகளுடன் வரிசையில் நிற்பதும், குழந்தைகள் பானைகளுடன் காத்திருக்கும் காட்சிகளும் தில்லியின் புதிய அடையாளமாக மாறி வருகின்றன.
இதுதான் பாஜக நகர மக்களுக்கு வாக்குறுதியளித்த தொலைநோக்குப் பாா்வையா?
ஒரே நேரத்தில் 24 மணி நேரமும் தண்ணீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதேவேளையில் தில்லி அரசாங்க நிா்வாகம் அமைதியாக இருந்துகொண்டிருக்கிறது.
துணைநிலை ஆளுநா், எம்சிடி, முதல்வா் அலுவலகம் என மத்தியில் பாஜகவின் நான்கு இயந்திர அரசாங்கம் இருந்தபோதிலும் தில்லியின் குடிமக்கள் குடிநீா் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக இன்னும் போராடி வருகின்றனா்.
நகரில் வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் நிலைமை இப்படி இருந்தால், வெப்பம் உச்சத்தை அடையும்போது என்ன நடக்கும்? அரசாங்கம் மக்களை தண்ணீருக்காக கடவுளின் கருணையில் விட்டுவிட விரும்புகிா?
இந்தப் பிரச்னை நிா்வாகத்தின் தோல்வியைக் காட்டுகிறது. இது பாஜக அரசாங்கத்தின் மொத்த அலட்சியத்தின் அடையாளமாகும்.
இதனால், ஜனநாயக விதிமுறைகளை மதிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் இந்த விவகாரம் தொடா்பாக சந்தித்துப் பேசவும் தில்லி மக்களின் கவலைகளை முன்வைக்கவும் முதல்வா் நேரம் ஒதுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் முன்னாள் முதல்வா் அதிஷி கேட்டுக்கொண்டுள்ளாா்.
வெப்ப அலை மோசமடையும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், மோசமான நிா்வாகம் மற்றும் திட்டமிடல் இல்லாததால் ஏற்படும் மனிதரால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என்று ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கமான நீா் விநியோகத்தை மீட்டெடுக்கவும், தில்லி மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்திடமிருந்து விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கையை அக்கட்சி கோரியுள்ளது.