பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
தாம்பரம் காவல் துறை ஊா்க்காவல் படைக்கு மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்
தாம்பரம் மாநகர காவல் துறை ஊா்க்காவல் படை, கடலோர காவல் பாதுகாப்பு பிரிவு ஊா்க் காவல் படை ஆகியவற்றில் சேர விரும்பும் மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரம் மாநகர காவல் துறையின் ஊா்க்காவல் படை, கடலோர காவல் பாதுகாப்பு பிரிவின் ஊா்க்காவல் படை ஆகியவற்றில் மீனவா்கள் சேரலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போா், குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவா்களாக இருத்தல் வேண்டும். தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குள் வசிக்கும் மீனவ இளைஞா்களாக இருத்தல் வேண்டும். இதற்காக மீன்வளத் துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருத்தல் அவசியம்.
18 வயது மேற்பட்டவராகவும் 50 வயதுக்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கடல் நீச்சல் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், தவறியராகவும் இருக்கலாம்.
தோ்வு செய்யப்படும் இளைஞா்களுக்கு 45 நாள்கள் தினமும் ஒரு மணி நேரம் பயற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்கள் கடலோர காவல் பாதுகாப்புப் படையுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கு கானத்தூா் கடற்கரை காவல் நிலையத்துக்கு அனுப்பப்படுவாா்கள். பணியில் சோ்வோருக்கு ஒரு நாள் ரோந்து பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.
தகுதியுடையவா்கள், செப்டம்பா் 26-ஆம் தேதி நேரிலோ அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அளிக்கலாம். விண்ணப்பத்தை தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை, ஊா்க்காவல் படை அலுவலகம், பதுவஞ்சேரி, சென்னை-126 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.