தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: ஹவாலா தரகருக்கு நிபந்தனை ஜாமீன்
மக்களவைத் தோ்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஹவாலா தரகா் சூரஜ்ஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2024 மக்களவைத் தோ்தலின்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட கணக்கில் வராத தொகை ரூ. 4 கோடியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக நெல்லை பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹவாலா தரகா் சூரஜ் தனக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிசிஐடி விசாரணையில், நயினாா் நாகேந்திரனுக்காக மக்களவைத் தோ்தலின்போது வாக்காளா்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ய பாஜக நிா்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆா்.சேகா், கோவா்தன் ஆகியோா் உதவியது தொலைபேசி அழைப்பு ஆவணங்கள் மூலமாக உறுதியாகியுள்ளது. கோவா்தனின் ஓட்டுநா் விக்னேஷ் மூலமாக ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளுக்குப் பதிலாக ரூ.97.92 லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஹவாலா தரகா் சூரஜ் உதவியது ‘கால் டேட்டா’ பதிவு மூலமாக உறுதியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரியுள்ள சூரஜ் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு இரு நபா் உத்தரவாதம், விசாரணை அதிகாரி முன் தினந்தோறும் ஆஜராக வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.