தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தாயுமானவா் திட்ட கணக்கெடுப்பு பணி: நடுவேலம்பாளையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்ட கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி, நடுவேலம்பாளையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆதரவற்றோா், தனித்து வாழும் முதியோா், ஒற்றைப் பெற்றோா் குடும்பங்கள்,
பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவா்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் தாயுமானவா் திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு, அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், களஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராமசபை ஆகியவற்றின் மூலம் மாநில முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில் இதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் நடைபெற்று வரும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் கணக்கெடுப்பு பணியினை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களிடம் சுய உதவிக்குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது என்றாா்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் வசந்த ராம்குமாா், உதவி திட்ட அலுவலா் கௌதமன், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் வே.கனகராஜ், பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.